Virudhunagar district Thiruthangal

Advertisment

கணவன் செல்வபாண்டியனுடன் புது வாழ்க்கையைத் தொடங்கிய ஒன்றரை மாதத்திலேயே, நகைக்காக யாரோ சிலரால் கொல்லப்படுவோம் என்பதை, பிரகதி மோனிகா அறிந்திருக்கவில்லை. அன்றைய (8-ஆம் தேதி) தினம், செல்வபாண்டியனும், அவனது பெற்றோரும் வேலைக்குசென்றுவிட, மதிய நேரத்தில் பிரகதி மோனிகா மட்டுமே வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, அவர்களின்வீட்டு கதவு தட்டப்பட்டது.

வீட்டுக்குள் புகுந்தவர்கள்,பிரகதி மோனிகா வசித்த அதே (சிவகாசி – திருத்தங்கல் – ஆலமரத்துப்பட்டி ரோடு) பெரியார் காலனியில் குடியிருக்கும் இளைஞர்கள்தான். மதியசாப்பாட்டுக்காக, செல்வபாண்டியன் வீடு வந்து சேர்வதற்குள், கழுத்தறுபட்டு பிணமாககிடந்தாள் பிரகதி மோனிகா.

எதற்காக இந்த கொடூரக் கொலை?

பி.ஏ. பட்டதாரியான பிரகதி மோனிகாவுக்கு கழுத்து நிறைய நகைகள் போட்டு, அவளது பெற்றோர், செல்வபாண்டியனுக்கு திருமணம் முடித்து வைத்தனர், கரோனா காலக்கட்டத்தில் ஒரு வேலைக்கும் செல்லாமல், போதை போன்ற செலவுகளுக்கு, கையில் பணம் இல்லாமல் திரிந்த அந்த ஏரியா இளைஞனின் கண்களை, பிரகதி போட்டிருந்த நகைகள் உறுத்தியிருக்கின்றன. அவன்,நண்பர்களை கூட்டு சேர்த்துக்கொண்டு, நகைகளைப் பறிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறான். பகல் பொழுதென்றாலும், ஆளில்லாத நேரம் பார்த்து, கதவைத் தட்டி, அந்த இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, டாலருடன் கூடிய ஒன்றரை பவுன் செயினும், மஞ்சள் கயிற்றில் அரை பவுன் தாலி மட்டுமே, பிரகதி அணிந்திருக்கிறார்.வந்தவர்கள், இரண்டு பவுன் தங்கத்துக்காக கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கின்றனர். அவர்களுடன் அவள் போராடியபோது, கத்தியால் கையை கீறியிருக்கின்றனர். உயிருக்காகவும் அவள் போராட, கழுத்தை அறுத்துகொலை செய்துவிட்டே, நகையோடு கிளம்பியிருக்கின்றனர். அரை பவுன் டாலர், அவள் பிணத்தருகேதான் கிடந்திருக்கிறது. வெறும் ஒன்றரை பவுனுக்காகத்தான் கொலையே நடந்திருக்கிறது.

Advertisment

மதுரை எஸ்.பி. சுஜித்குமார், ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் நேரில் விசாரணை நடத்த, தனிப்படை அமைக்கப்பட்டு, மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்த, அந்த ஏரியாவிலுள்ள 7 இளைஞர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் அளித்த தகவலால், முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அழுத்தம் தந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில், பிரகதியின் உறவினர்கள், பிணத்தை வாங்க மறுத்தனர். ‘குற்றவாளியைப் பிடித்துவிட்டோம்’ என்று அந்த இளைஞர்கள் குறித்த விபரங்களை காவல்துறையினர் சொன்னபிறகே, பிரகதியின் உடல் பெறப்பட்டுள்ளது. உழைக்காமலேயே, தங்கள் இஷ்டத்துக்கு வாழவேண்டும் என்ற குறுக்கு புத்தி, சிலரை நகைப்பறிப்பில் ஈடுபட வைத்து, புதுமணப் பெண்ணின் உயிரையும் பறித்துவிட்டது.