/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/7_138.jpg)
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் நாராயணதாஸ் - ஹேமபிரியா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாத தவணையும் மாதம் மாதம் சரியாக கட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று மாத தவணையை நாராயணதாஸ் கட்டத் தவறியுள்ளார். அதனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சார்பாக வந்த 4 பேர் மாத தவணையை கேட்டு உள்ளனர். மேலும் தொடர்ந்து மூன்று நாட்களாக வீட்டின் முன்பு நின்று கொண்டு பணத்தை கொடுக்கும் படி தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நாராயணதாஸின் மனைவி ஹேமபிரியா, தனது கணவரும், மகன்களும் வெளியே சென்றுள்ளனர். நான் மட்டும் தான் இருக்கிறேன் அவர்கள் வந்தவுடன் மாத தவணையைக் கட்ட ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இதனையெல்லாம் காதுகொடுத்துக் கூடக் கேட்காத நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், தொடர்ந்து வீட்டின் முன்பு நின்று ஆபாசமாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டின் சுவரின் மீது, “இந்த சொந்து நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டு வாரக்கடனில் உள்ளது” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது ஹேமபிரியாவை மன உளைச்சலில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி மீண்டு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை உடனே கட்ட வேண்டும் என்று ஹேமபிரியாவை வற்புறுத்தியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹேமபிரியா அவர்கள் முன்னிலையில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். அதைபார்த்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
ஹேமபிரியாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்று நேற்று முன் தினம் காலை ஹேம பிரியா உயிரிழந்தார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹேமபிரியாவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து நாராயணதாஸ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)