Skip to main content

பாஜக பிரமுகர் மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் விவசாயி

Published on 03/09/2023 | Edited on 03/09/2023

 

A woman farmer tried to after being threatened by a BJP leader

 

சேலம் அருகே, பாஜக பிரமுகர் ஒருவர், நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, கொலை மிரட்டல் விடுத்ததால் விரக்தி அடைந்த பெண் விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் அருகே உள்ள சின்ன வீராணத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு (50). விவசாயி. இவருடைய மகன் லோகேஷ் (18). இவர்கள் இருவரும், செப். 1ம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

 

அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென்று சின்னப்பொண்ணு, தன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் அவரை தடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றினர்.

 

இதையடுத்து சின்னப்பொண்ணுவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:

 

''எங்களுக்குச் சொந்தமாக 2.75 ஏக்கர் விவசாய நிலம் சின்ன வீராணத்தில் உள்ளது. கடந்த 7 ஆண்டுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். அதையடுத்து, அந்த நிலத்தில் நான் விவசாயம் செய்து வருகிறேன். இதில் 1.75 சென்ட் நிலத்தை, சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சரவணன் என்பவர், எங்களை ஏமாற்றி தன் பெயரில் எழுதிக் கொண்டார்.

 

எங்கள் நிலத்தை ஒப்படைத்து விடுமாறு கேட்டபோது சரவணன், கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், யாரிடம் சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.

 

இது தொடர்பாக, வீராணம்  காவல்நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகும், சரவணன் எங்களை தொடர்ந்து மிரட்டி வந்ததால், சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்,'' என்று காவல்துறையினரிடம் கூறினார்.

 

இதையடுத்து சின்னப்பொண்ணு, அவருடைய மகன் லோகேஷ் ஆகிய இருவரையும் சேலம் நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பாஜக பிரமுகர் நிலத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி, பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்