
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது மகாதேவி மங்கலம். இந்த ஊரைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி வேலை செய்துவரும் சண்முகம். சண்முகம் - விஜயா (37) தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி மகாதேவி மங்கலத்தில் 100 நாட்கள் பணிகள் நடந்துவந்தது. அங்கு விஜயா வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். அங்கு மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், மகாதேவி மங்கலத்தில்நடைபெற்றுவந்த 100 நாள் வேலை திட்ட பணியிடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தினர்.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பலருக்கும் கிராம சுகாதார செவிலியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். அப்போது விஜயாவையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். தனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது, அதனால் மயக்கம் வரும் எனவே தனக்கு தடுப்பூசி போட வேண்டாம் என விஜயா கூறியுள்ளார். ஆனால் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் தனலட்சுமி வலியுறுத்தி கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவ குழுவினர் விஜயாவிற்கு ரத்த அழுத்த பரிசோதனை எதுவும் செய்யாமல் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டுக்குச் சென்ற விஜயாவுக்கு அன்று நள்ளிரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று அதிகாலை 6 மணியளவில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கொண்டு சென்ற விஜயாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தத் தகவல் அறிந்த மகாதேவி மங்கலம் கிராம மக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை 11 மணியளவில் செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்ற செஞ்சி வட்டாட்சியர் ராஜன், டி.எஸ்.பி. இளங்கோவன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விஜயாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மகாதேவிமங்கலம் கிராம மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)