Skip to main content

இளம்பெண்ணுக்கு சரமாரி கொடுவாள் வெட்டு; வாலிபருக்கு வலைவீச்சு!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

Woman case police searching man salem issue

 

மேட்டூர் அருகே, கணவரை பிரிந்து வாழும் இளம்பெண், ஆண் நண்பருடனான தொடர்பை திடீரென்று கைவிட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், கொடுவாளால் அவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மனைவி கவிதா(30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த எட்டு மாதங்களாக கணவரை பிரிந்து கவிதா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்தான், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நங்கவள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் (35) என்ற கூலித்தொழிலாளியுடன் கவிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் நெருக்கம் அதிகமானதல் இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கிப் பழகி வந்தனர். 

 

கவிதா தனியாக இருக்கும்போது அவருடைய வீட்டுக்கு வாலிபர் செல்வராஜ் அடிக்கடி வந்து செல்வதை கண்காணித்த அக்கம்பக்கத்தினர், கவிதாவை கண்டித்துள்ளனர். அவருடைய நடத்தை குறித்தும் விமர்சனம் செய்துள்ளனர். இதையடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக செல்வராஜை சந்திப்பதையும், அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்தார். ஆனாலும் செல்வராஜ் விடாமல் அவரை துரத்திக் கொண்டே இருந்தார். 

 

இந்நிலையில், கவிதாவை சந்திக்க வேண்டும் என்றும் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் கூறி ஜன. 14ம் தேதியன்று அவரை தனிமையான ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் செல்வராஜ். அங்கு வைத்து, தன்னை சந்திக்க மறுப்பது குறித்தும், தன்னுடன் முன்புபோல் நெருக்கமாக இருக்க மறுப்பு தெரிவிப்பது ஏன் என்றும் கேட்டுள்ளார். அத்துடன், வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கிறாயா? என்றும் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த செல்வராஜ், தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அங்கே ரத்த வெள்ளத்தில் கவிதா உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

 

இதுகுறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல்நிலைய எஸ்.ஐ. வேணுகோபால் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான செல்வராஜை தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்