/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1639.jpg)
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியில் உள்ள தீரன் நகரில் கடந்த 2015ஆம் ஆண்டு வேலா கருணை இல்லம் துவக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இந்தக் கருணை இல்லத்தில், மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று இருக்கும் நபர்களை மீட்டுவந்து பராமரிப்பது, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், அந்நகரில் இருந்த ஒரு பெண்ணை மீட்டு கருணை இல்லத்தில் தங்கவைத்து பராமரித்துவந்தனர். அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தப் பெண் கடந்த மாதம் முற்றிலும் குணமடைந்துள்ளார். அவரிடம் பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண், தன் பெயர் லட்சுமி என்றும் தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நரசையா தனது கணவர் என்றும்,மூன்று மகள்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் லட்சுமியின் ஃபோட்டோவை தெலங்கானா மாநில போலீசாருக்கு அனுப்பிவைத்துள்ளனர். உடனே தெலங்கானா போலீசார் நரசையாவை சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் போலீசாரிடம், “கடந்த 2010ஆம் ஆண்டு என் மனைவி லட்சுமி காணாமல் போனார். உள்ளூர் போலீசில் அப்போதே புகார் கொடுத்திருந்தேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், சில மாதங்கள் கழித்து அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடலை எனது மனைவி எனக் கூறி என்னிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்தப் பெண் உடலுக்கு நான் இறுதி சடங்குகள்கூட செய்துவிட்டேன். ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எனது மனைவி உயிரோடு இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, நரசையாவை பெரம்பலூர் அழைத்து வந்து கருணை இல்லத்தில் இருந்த அவரது மனைவி லட்சுமியை நேரில் காட்டியதும், அவர் மனைவியைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார். லட்சுமிக்கும் தனது கணவரை அடையாளம் தெரிந்து சந்தோஷத்தில் கண்ணீர் வடித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)