/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2496.jpg)
நாகையில் பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாதர் சங்கத்தினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை அடுத்துள்ள பொரவச்சேரியைச் சேர்ந்தவர் உமர்பாருக். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி புகைப்படத்தை மற்றொரு நபருடன் இணைத்து சமூக வலைதளத்தில் போலி கணக்கு தொடங்கி வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு காரணம் தனது கணவர் தான் எனக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் மாதர் சங்கத்தினர் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாகையில் அனைத்து மாதர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3241.jpg)
வட்டாட்சியர் அலுவலக சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, “போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் உங்களை கைது செய்கிறோம்” என டி.எஸ்.பி சரவணன் கூறினார். இதையடுத்து போலீசாருக்கும் மாதர் சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாதர் சங்கத்தினர் கூறுகையில், "நியாயமன முறையில் நியாயம் கேட்டு போராடும் எங்களை போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக கூறி கைது செய்யுறாங்க" எனத் தெரிவித்தனர்.
Follow Us