Woman arrested for spreading video on YouTube

Advertisment

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர், ‘டிக்டாக்' செயலி இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த போது அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் ஆனார். 'டிக்டாக்' செயலி தடை செய்யப்பட்ட பின்பு அவர் தனியாக யூட்யூப் சேனல் தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். அதில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் டிக்டாக் மூலம் தேனி அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவரும் பிரபலம் அடைந்தார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் அந்த பெண் பிற சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், அந்த பெண் குறித்தும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் அவதூறான கருத்துகளை யூட்யூப் மூலம் திவ்யா பரப்பி வந்தார்.

இது சம்மந்தமாக தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த பெண், புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவை தேடி வந்தனர். திவ்யா நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதைப் பார்த்ததும் தேனியில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நாகூர் விரைந்துச் சென்று திவ்யாவை கைது செய்தனர். அதன்பின் நடந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.