Woman arrested in sivasankar baba case

Advertisment

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சிபிசிஐடி போலீசார் விசாரணைக்குப் பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய செங்கல்பட்டு மகளிர் கோர்ட், அவரை 15 நாட்கள் அதாவது ஜூலை 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவருக்கு சிறையில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபா கொண்டு செல்லப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் விவகாரங்களில் சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக இருந்து மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர்களிடம் சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.