Woman arrested in husband mystery death case

அரியலூர் மாவட்டம், ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(42). இவரது சகோதரர் குணசேகரன்(44). இவர்கள் அதே ஊரில் அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2007ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் குணசேகரன், சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளிவந்தனர்.

Advertisment

கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கண்ட கொலை வழக்கில் நீதிமன்றம் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியான அன்று, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய குணசேகரன், சங்கர் ஆகியோரில் சங்கர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார். குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்து குணசேகரனின் சகோதரி லட்சுமி, குணசேகரனின் மனைவி ஜெயந்தியிடம் கேட்டுள்ளார். அப்போது ஜெயந்தி, தனது கணவர் குணசேகரன் கொலை வழக்கில் போலீசாருக்கு பயந்துகொண்டு கேரளாவில் பதுங்கி இருப்பதாகவும் அங்கிருந்தபடி அவ்வப்போது தங்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

11 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை கேரளாவில் இருந்து குணசேகரன் ஊருக்கு வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி லட்சுமி, கடந்த 5ம் தேதி ஆண்டிமடம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். லட்சுமியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆண்டிமடம் போலீசார், குணசேகரன் மனைவி ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் ஜெயந்தி அளித்த வாக்குமூலத்தில், “கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கணவர் குணசேகர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் கணவர் குணசேகரனை வேகமாக தள்ளி விட்டதில் கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டு அந்த இடத்திலேயே அவர் இறந்து போனார். இந்த தகவல் வெளியே தெரியாமல் இருப்பதற்காக என் (ஜெயந்தி) தந்தை மகாராஜன்(75), சகோதரி ஜோதி(40) ஆகிய மூவரும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் குணசேகரன் உடலை புதைத்து விட்டோம். 4 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகரன் புதைத்த இடத்தில் தோண்டி அவரது எலும்புகளை சேகரித்து எடுத்துச் சென்று அதை எரித்து தண்ணீரில் கரைத்துவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜெய்ந்தி, கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மகாராஜன், சகோதரி ஜோதி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.