/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1688.jpg)
சேலத்தில், தகாத உறவுக்குத் தடையாக இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு கணவனை, மனைவியே தலையணையால் அமுக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அன்னதானப்பட்டி மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (29). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவி(25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜன.16ம் தேதி அன்று, வீட்டில் ஜீவா சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி உதவி ஆணையர் அசோகன், காவல் ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
உடற்கூராய்வு அறிக்கையில், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்தான் ஜீவா இறந்திருக்கக்கூடும் என்றும், வாய், மூக்கை பொத்தி கொன்றிருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, சடலம் கைப்பற்றப்பட்ட நாளில் இருந்து ஜீவாவின் மனைவி கவியின் நடவடிக்கைகளைக் காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அன்னதானப்பட்டி முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா (39) என்பவருடன் கவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜா, டெம்போ ஓட்டுநராக உள்ளார். திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கவி, அடிக்கடி ராஜாவுடன் செல்போனில் பேசி வந்திருப்பதை வைத்துதான் அவர்களிடையேயான உறவை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2660.jpg)
ஜீவாவின் மரணத்தில் அவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இருவரையும் பிடித்து வந்து கிடுக்கிடுப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஜீவாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, சந்தேக மரண வழக்காக இருந்த ஜீவா மரண வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
விசாரணையில் கவியும், ராஜாவும் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறியது: "கொலையுண்ட ஜீவாவின் சொந்த ஊர், இடைப்பாடி அருகே உள்ள பூலாவாரி ஆகும். கடந்த ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊரில் உறவினர் ஒருவரின் துக்க வீட்டிற்கு மனைவியுடன் ஜீவா சென்றிருந்தார். அதே வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக வந்திருந்த ராஜாவுடன், கவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் ராஜாவும் அன்னதானப்பட்டியில் வசிப்பது கவிக்கு தெரியவந்துள்ளது. அங்கு வைத்து இருவரும் தங்களுடைய செல்போன் நம்பர்களை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
தினமும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்பட்டது. ஜீவா வெளியே சென்ற சமயங்களில், ராஜாவை தன் வீட்டிற்கே வரவழைத்து இருவரும் 'சந்தோஷமாக' இருந்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் மூலமாக கவிக்கும் ராஜாவுக்கும் இடையே உள்ள உறவைத் தெரிந்து கொண்ட ஜீவா, மனைவியைக் கண்டித்துள்ளார். சில நேரம், அவரைக்கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆனாலும், ராஜாவுடனான தொடர்பை கவி கைவிடவில்லை.
இந்த நிலையில்தான், தன் கணவர் உயிருடன் இருந்தால் தம்மால் சந்தோஷமாக வாழ முடியாது எனக்கருதிய கவி, ஆண் நண்பருடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். கடந்த 16ம் தேதியன்று மது போதையில் வீட்டுக்கு வந்த ஜீவா, சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது அங்கு வந்த ராஜா, கவியுடன் சேர்ந்து கொண்டு ஜீவாவின் வாயில் துணியை வைத்து அடைத்தார். பின்னர் தலையணையால் அமுக்கி, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர். இதையடுத்து, மது போதை அதிகமானதால் மாரடைப்பு ஏற்பட்டு ஜீவா இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார்கள்".இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.
இதையடுத்து கவி, ராஜா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்ததால் கணவரையே ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)