Advertisment

குடி கெடுத்த குடி; 2 குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தாய் தற்கொலை!

Woman and her two child passed away in train accident in krishnagiri

Advertisment

ஊத்தங்கரை அருகே, மதுவுக்கு அடிமையான கணவனால் மனம் உடைந்த மனைவி, தன் இரு குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்மு (34). இவர்களுக்கு சுபிதா (7) என்ற பெண் குழந்தையும், பீஷ்மர் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். சுரேஷூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். குடும்பச் செலவுக்கும் பணம் தருவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை (மார்ச் 6) காலையிலேயே அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றாடம் குடிகாரக் கணவனுடன் போராட சக்தி இல்லாத அம்மு, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். சம்பவத்தன்று காலை 11 மணியளவில் வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியே சென்ற அம்மு, வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வேகமாக வந்த சதாப்தி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில், அம்மு மற்றும் அவருடைய இரு குழந்தைகளின் உடல்களும் தண்டவாளப் பாதையில் சிதறிக்கிடந்தன.

Advertisment

அம்முவுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். சுபிதா, பீஷ்மர் மட்டுமின்றி 16 வயதில் ஒரு மகளும், 12 மற்றும் 10 வயதுகளில் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மற்ற மூன்று பேரும் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றுவிட்டதால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லாவி காவல்துறையினர், ரயில்வே காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலங்களைக் கைப்பற்றிஉடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடிகாரக் கணவனால் விரக்தி அடைந்த மனைவி, தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe