/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrested-1_0.jpg)
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த கோதண்டபாணி (36) என்பவர் இன்டீரியல் டெக்கரேஷன் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி நிரோஷா(30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி அதிகாலை தனது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் தனது கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாக நிரோஷா வீட்டிற்கு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது, அந்த மர்ம நபர் அங்கு இல்லாததால், உடனடியாக சைதாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவர்களது விசாரணையில் நிரோஷாவின் கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவர் நிரோஷாவின் கணவன் கோதண்டபாணியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை செய்ததில் டி.நகரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் நிரோஷா வேலை செய்து வந்துள்ளார். அவரது அழகு நிலையத்தின் அருகே உள்ள டெய்லர் கடையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத மணிகண்டன்(30) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் நிரோஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. கோதண்டபாணி வேலைக்குச் சென்றதும் மணிகண்டன் அவரது வீட்டுக்குச் சென்று நிரோஷாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் கோதண்டபாணிக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் தனது மனைவி நிரோஷாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிரோஷா தனது கள்ளக்காதலன் மணிகண்டன் உடன் சேர்ந்து கோதண்டபாணியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று அதிகாலை கோதண்டபாணி வீட்டில் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருக்கும் போது கள்ளக்காதலன் மணிகண்டனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். தூங்கிக்கொண்டிருந்த கோதண்டபாணியை மணிகண்டன் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவருக்கு நிரோஷா தப்பிச் செல்ல உதவி செய்துள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து யாரோ மர்ம நபர் தனது கணவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடுவதாக நாடகமாடிக் கத்தி சத்தம் போட்டுள்ளார் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து நிரோஷாவை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான மணிகண்டனை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மணிகண்டனை நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சென்னையில் கொலை செய்து விட்டு சங்கராபுரத்தில் சரண்டரான கொலையாளி குறித்து தகவலறிந்த சங்கராபுரம் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)