Woman and 6-month-old child passed away road accident

திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா காலேஜ் எதிரில் உள்ள எம். ஜி. ஆர். நகரைச்சேர்ந்தவர் மணிவண்ணன்(30). இவரது மனைவி சுபாஷினி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தை அனன்யா உள்ளனர். மணிவண்ணன் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் மணிவண்ணன் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் துணிகளைமாட்டிக் கொண்டு திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்வதற்காக சேலம் - கோவை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் சித்தோடு பேரோடு பிரிவு ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிகாலை 4 மணி அளவில் வந்த போது, அவ்வழியாக அடையாளம் வந்த தெரியாத வாகனம் மணிவண்ணனை வேகமாக கடந்து சென்றது.

அப்போது அந்த வாகனத்தின் காற்று அதிகமாக வீசியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற மணிவண்ணன் நிலை தடுமாறி குடும்பத்துடன் கீழே விழுந்தார். இதில் மணிவண்ணன் மற்றும் 2 குழந்தைகளும் ரோட்டின் இடது பக்கமாகவும், சுபாஷினி ரோட்டில் வலது பக்கமாக விழுந்தனர். இதில் சுபாசினி மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று தலை மீது ஏறிச் சென்றது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதேபோல் ரோட்டில் விழுந்தால் ஆறு மாத பெண் குழந்தையும் பரிதாபமாக இறந்தது.

Advertisment

விபத்து குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த மணிவண்ணன் மற்றும் நான்கு வயது சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைப் போல் விபத்தில் பலியான சுபாஷினி மற்றும் ஆறு மாத குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.