Skip to main content

பாஜகவில் முக்கிய பொறுப்பு; புகாரை வாங்க மறுக்கும் போலீஸ் - கண்ணீர் வடிக்கும் பெண் 

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
woman alleged that wife of  fraudster refused to take police complaint because she was in BJP

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ளது கெம்மாரம்பாளையம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி கௌரி. சண்முக சுந்தரம் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கும் கோவை பாஜக நிர்வாகியான பிரீத்தியின் கணவர் மகேந்திர குமாருக்கும் நிலம் வாங்கியது தொடர்பாகப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட குறை தீர்ப்பு கூட்டத்திற்குச் சென்ற இவரின் மனைவி கெளரி, பாஜக பிரமுகர் ப்ரீத்தியின் கணவர் மகேந்திரகுமார் அடியாட்களோடு வந்து தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அனைத்து பொருட்களையும் திருடிச் சென்றதாகவும், இதனால் அதிர்ச்சியில் உறைந்த தாங்கள் இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு காரமடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், ஆனால் அந்தக் காவல் நிலையத்தில் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். 

இது குறித்து கெளரி கூறுகையில், தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அவர் கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரகுமார் என்பவருக்குச் சொந்தமான 6.48 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும், அப்போது அந்த நிலத்திற்கான பணத்தில் பெரும் பகுதியைக் கொடுத்துவிட்டு கிரய ஒப்பந்தம் கேட்டபோது, தங்களை அலைக்கழித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். 

இந்நிலையில் அந்த நிலத்தில் தாங்கள் வீடு கட்டி, அந்த வீட்டில் தனது உறவினர்கள் வசித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், நிலத்தை தங்களுக்கு கிரயம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், இது குறித்து பல முறை கேட்டும் எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்தவர்கள், தற்போது அந்த இடத்தை காலி செய்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறி மிரட்டுவதாகவும் கூறியிருக்கிறார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மகேந்திரகுமார் தனது ஆட்களை கொண்டு மிரட்டி வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு சென்று அவரது ஆட்களுடன் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து, 2 லாரிகளில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறும் அவர், இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களில் ஒரு லாரியில் எடுத்துச் சென்றதை மட்டும் கொடுத்துவிட்டு, மற்றொரு லாரியில் எடுத்துச் சென்ற பொருட்களை திருப்பி கொடுக்காமல் அலைகழித்து வருகின்றனர் எனவும் கூறுகின்றார். இதன் காரணமாக காரமடை காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசினால், தங்கள் மீது வழக்கு போட்டுவிடுவோம் எனக் கூறி மிரட்டுவதாகவும் கூறும் அவர், இதன் காரணமாகவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல், மகேந்திரகுமாரின் மனைவி பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், தங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்