/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gh_43.jpg)
சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்க வந்திருந்தார். செரியலூர் முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்ட கலையரங்கத்தை திறந்து வைத்து பேசும் போது... " எனக்கு பிடிக்காத 3 விஷயம் மதிப்பெண், தேர்வு, டியூசன். மதிப்பெண்களை வைத்து மாணவர்களை எடைபோடுவது நல்லதல்ல. மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறையில் எனக்கு உடன்பாடு கிடையாது. மதிப்பெண்ணால் மாணவர்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும். அதனால், தேர்வு முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. என்று பேசும் போது மாணவர்களின் விசில் சத்தம் பறந்தது.
ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தினாலே மாணவர்கள் டியூசன் செல்லத் தேவையில்லை. இதுகுறித்து, நான் பேசுவதாலேயே என்னை பள்ளிகளுக்கு பேச அழைப்பதில்லை. இந்தப் பள்ளியில் (கொத்தமங்கலம்) பயின்ற மாணவன் வசீகரன் 7.5% இட ஒதுக்கீடு மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளார். நீட் தேர்வு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தான் அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் நான் நீட் தேர்வை ஆதரிக்கிறேன். சிலர் புரிதல் இல்லாமல் நீட் தேர்வை எதிர்த்து மேடைகளில் பேசுகின்றனர்.
நான் எனது சொந்தப் பணத்தில் எந்த வேளையும் செய்யவில்லை. நீங்கள் கட்டும் வரிப்பணம் தான் எம்.பி, எம்.எல்.ஏ க்கள் மூலம் திரும்பி உங்களுக்காக வருகிறது. ஒரு எம்.பி க்கு ஒரு ஆண்டுக்கு ரூ.5 கோடி ஒதுக்குகிறார்கள் அதை ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.80 லட்சம் வீதம் பிரித்து பணிகளை செய்கிறோம். அதே போல ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் நிதியை கொண்டு வரலாம். நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் பரிந்துறைதான் செய்ய முடியும்.இது போன்ற பணிகள் முடிவடைந்ததும் உடனே பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் யார் நிதி பரிந்துறை செய்தார்களோ அவர்கள் வரும்வரை திறக்காமல் வைத்திருக்க கூடாது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)