அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாக, சட்டவிரோத விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்தை சீல் வைப்பது தொடர்பாக, நடுவட்டம் தேர்வுநிலைப் பேரூராட்சி செயல் அதிகாரி, நிலத்தின் உரிமையாளரான ஃபரீஸ் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி ஃபரீஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமானத்தை முறைப்படுத்தக்கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக, மனுதாரர் ஃபரீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

without permission building infrastructure officers chennai high court

Advertisment

அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்ட அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு எதிராக சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அதிகாரி தரப்பி்ல் வாதிடப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2008-ம் ஆண்டு நீலகிரி மலைப்பகுதியை பாதுகாக்க, சட்டவிதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக் காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும், அமல்படுத்தியது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்காமல், அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதால்தான், சட்டவிரோத, விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.