Advertisment

“திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதினம் இல்லை..” - கி.வீரமணி

publive-image

திராவிடர் கழகம் சார்பில் திருச்சி பெரியார் மாளிகையில் மாநில அளவிலான மகளிர் அணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திராவிடர் கழகம் இயக்கத்தின் தலைவர் வீரமணி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், தி.க.வில் மகளிர் அணியின் பங்களிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்துப்பேசினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கி.வீரமணி, “திராவிட மாடல் ஆட்சி என்பது சுயமரியாதை,சமூக நல்லிணக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும்‌. இருப்பினும் மனித குலத்தின் சரிபகுதியாக இருக்கும் பெண்களின் உரிமையை அடைய வேண்டும் என தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார். ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற பிரிவு பேதம் இருக்க கூடாது என்று சொல்லி பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் நடத்தினார்.

Advertisment

இந்த மாநாட்டில் சொத்துரிமை, படிப்புரிமை, உத்யோக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணல் அம்பேத்கர் பிரதமர் நேரு காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த போதும் கூட இந்து சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் நேரத்தில் ஒரு சில உரிமைகளுக்கு மட்டும் தான் சனாதானிகள் இடம் கொடுத்தனர். பிரதமர் நேருவின் கருத்துக்களை கூட எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். பெண்களுக்கு சொத்துரிமை என்ற அம்பேத்கரின் சட்டத்தை இந்து சட்ட மசோதாவில் சனாதானிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் சோனியா காந்தி தலைமையில், மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது திமுக அங்கம் வகித்த போது அந்த UPA கூட்டணியில் சொத்துரிமை சட்டம் நிறைவேறியது. பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை திராவிட மாடல் ஆட்சி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. அனைவருக்கும் அனைத்தும், பிறபொக்கும் எல்லா உயிருக்கும் என்பது தான் திராவிட மாடல் அதற்கு நேர் எதிரானது தான் ஆரிய மாடல்.

ஜாதி இருக்க வேண்டும், பெண்கள் அடுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். மாடல் இதை மாற்றுவது தான் திராவிட மாடல். 8-ஆண்டுகள் மோடி ஆட்சியிலும், அதற்க்கு முந்தைய ஆட்சியிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டம் கிடப்பில் உள்ளது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 50% இட ஒதுக்கீடு திமுக அரசு வழங்கியுள்ளது. கல்லூரி படிக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல்.

திராவிட மாடலை எதிர்த்தால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதினம் இல்லை. ஏனெனில் சூத்திரர்கள் சந்நியாசியாக முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. அந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்க முடியாது. சந்நியாசி, துறவியர்கள் எல்லாம் பேச முடியாது. சங்கராச்சாரி மட்டும் தான் இதிலிருந்து தப்புவார். உயர்சாதி மட்டும் தான் இருக்கும்.

அதிமுக, பாஜக இடையே யார் ஆளும் கட்சியாக வர வேண்டும் என்ற சண்டை இல்லை; யார் எதிர்க்கட்சியாக வருவது என்பதில் தான் சண்டை. முதல் எதிர்கட்சியா, இரண்டாவது எதிர்க்கட்சியா என்பதில் தான் சண்டை. இதன் மூலம் அவர்கள் எப்போதும் ஆளும் கட்சியாக வர முடியாது என்பது தெரிகிறது” என்றார்.

பாஜக எதிர்க்கும் போது திமுக பின் வாங்குகிறதா எனச் செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு பதில் அளித்த அவர், “திமுக ஒருபோதும் பின்வாங்காது. புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியை பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். புலியை பற்றி தெரியாதவர்களுக்கு புரியாது” என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe