
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூரில் வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “புயலால் பாதித்த புதுச்சேரியில் ஒரு ரேஷன் அட்டைக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளனர். இதே அளவு தொகையை அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.எனவே முதலமைச்சர் இந்த கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களும் மட்டும் நிவாரணம் என்று இல்லாமல், வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த ஒரு குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விசிக கேட்டுக்கொள்கிறது.
வெள்ள நிவாரணமாக மத்திய அரசு 2457 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விசிக நாடாளுமன்ற உறுப்பினர்களான நானும் ரவிக்குமாரும், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தராய்யை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்திருக்கிறோம். அதனை பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். வெள்ள நிவாரணம் பணிகளை ராணுவ நடவடிக்கை என்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவது ஆறுதல் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (06.12.2024) மாலை சென்னையில் நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “இன்றைக்குப் புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. பிரபல பதிப்பகத்தின் சார்பில் வெளிவரும் இந்த புத்தகம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சார்ந்த இடதுசாரி சிந்தனையாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலாக வெளியிடுகிறார்கள். இந்த அளபெரிய முயற்சியை மேற்கொண்ட பதிப்பகத்திற்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நிகழ்விலே பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு முன்பே நான் அதற்கும் இசைவு அளித்திருந்தேன். ஆனால் தற்போதைய சூழலில் அந்த நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். அந்த விழா வெற்றிகரமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.