Winch trip back to Palani Murugan Temple! Cell phone ban. !!

Advertisment

கரோனாவால் கடந்த எட்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பழனி வின்ச் பயணம் மீண்டும் துவங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கரோனா ஊரடங்கு தளர்விற்குப் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பழனி முருகனை மக்கள் தரிசனம் செய்துவருகிறார்கள். இந்நிலையில், மலை ஏறுவதற்கு பயன்படும் மின் இழுவை ரயில்களை (வின்ச்) இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கோவில் நிர்வாகம் மூன்று மின் இழுவை ரயில்கள் பயணத்தை மீண்டும் துவக்கியது. சுமார் 8 மாதங்களுக்குப் பின்னர், வின்ச் மூலம் பக்தர்கள் பயணித்து மகிழ்ந்தனர்.

Advertisment

இதுசம்பந்தமாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முருக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழனி கோவிலுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே பயணிக்க முடியும். டிக்கெட் கவுண்டர்கள் ஏதும் திறக்கப்படாது. பயணத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னர், வின்ச் காத்திருப்பு மண்டபத்திற்கு பக்தர்கள் வந்துவிட வேண்டும். பழனியில் உள்ள வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் ஆகிய மூன்று வின்சில், பக்தர்கள் எந்த வின்சில் முன்பதிவு செய்தனரோ அந்த வின்சில், அந்த நேரத்தில் மட்டுமே பயணிக்க முடியும். ஆன்லைன் முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்ட ஐ.டி. கார்டின் அசல் கொண்டுவர வேண்டும். கூடுதலாக நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், ஒவ்வொரு வின்சிலும் உள்ள இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பக்தர்கள் பயணிக்க முடியும். அதன்படி ஆன்லைன் முன்பதிவு இருக்கும். வழக்கம்போல, காலணிகளை, வின்ச் நிலையத்தில் உள்ள காலணி பாதுகாப்பு அறையில் வைத்துவிட வேண்டும். காலணிகளோடு வின்சில் அனுமதி இல்லை ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும்விட, பக்தர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, மொபைல் ஃபோன் உள்ளிட்ட மின்னணு பொருள்களை வின்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் கோவில் நிர்வாகத்தால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல மொபைல் ஃபோனை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.