
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றியிருந்தார். அதில், “நம்மிடம் நேர்மை இருக்கிறது. கறைபடியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. உழைப்பதற்குத் தெம்பு இருக்கிறது. பேசுவதற்கு உண்மை இருக்கிறது. செயல்படுவதற்குத் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. இதற்கு மேல் என்ன இருக்கிறது?. போய் கலக்குங்கள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக முதல்வராக்கிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி என த.வெ.க.வினர், அக்கட்சியின் தலைவர் விஜய்யினுடைய படத்தோடு போஸ்டரை ஒட்டியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இத்தகைய சூழலில் தான் மதுரை மேற்கு தொகுதியைச் சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக த.வெ.க. தலைவர் விஜய் மதுரையில் போட்டியிட உள்ளாரா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.