Skip to main content

உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை இன்று வெளியாகுமா?

Published on 06/08/2018 | Edited on 06/08/2018


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை செப்டம்பர் 18-க்குள் வெளியிட வேண்டும் என்றும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடந்தாண்டு செப்டம்பர் 4-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காலக்கெடுவுக்குள் அறிவிப்பு வெளியிடப்படாததால், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகருக்கு எதிராக திமுகவின் ஆர்.எஸ். பாரதி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணையர் பெரோஸ்கான், காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் போனதற்கு சட்டப்பிரிவு 28-ன் கீழுள்ள பிரிவுகளை தமிழக அரசு நீக்கியதும் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடியாததுமே காரணம் என விளக்கமளித்திருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அட்டவணையை தாக்கல் செய்ய வில்லை என்றால் மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். எனவே இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

dmk

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. உத்தமபாளையம் ஒன்றிய தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சி இருந்தார் ஆனால் தலைவரின் செயல்பாட்டின் மீது அதிமுக திமுக உள்பட 10 கவுன்சிலர்களின் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

 

அதனடிப்படையில்  தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததின் எதிரொலியாக ஒன்றியத் தலைவர் பதவியை ஜான்சி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக துணைத் தலைவர் மூக்கம்மாள் தலைமையில் நிர்வாகம் நடந்து வந்தது. இந்தநிலையில் தான் தலைவர் தேர்வு நேற்று காலை ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடந்தது கலெக்டரின் நேர்முக உதவியாளர் தாமரைச்செல்வன் தேர்தல் அதிகாரியாக இருந்தார் பி.டி.ஓ.க்கள் ஜெயகாந்தன், செண்பகவள்ளி முன்னிலை வகித்தனர். ஆளுங்கட்சி கவுன்சிலர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார்.

 

dmk

 

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் திமுக கவுன்சிலர் 6 பேர் மட்டும் பங்கேற்றனர். அதிமுக கவுன்சிலர்கள் மற்றும்  துணைத் தலைவர் மூக்கம்மாள் உட்பட மூன்று பேர் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளியேற்றினர். முன்னாள் தலைவர் ஜான்சி கூட்டத்திற்கு வரவில்லை. வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் திமுகவைச் சேர்ந்த இன்பென்ட் பனிமய ஜெப்ரின் ஒன்றிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அதிமுக வசமிருந்த ஒன்றிய தலைவர் பதவியை தேனி தெற்கு மாவட்டச் செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் முயற்சியால் திமுக கைப்பற்றியிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஒன்றிய தலைவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதில் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

போலி சான்றிதழ் கொடுத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி - ஊராட்சிமன்ற தலைவி மீது புகார்

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

Winning local elections by giving fake certificates .. Complaint against the Panchayat Council Chairperson!

 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலி சான்றிதழைச் சமர்ப்பித்து தேர்தலில் வெற்றிபெற்றது தெரியவந்துள்ளது.

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தோலப்பள்ளி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கல்பனா சுரேஷ் என்ற பெண் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் கல்பனா சுரேஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அவர் போலி சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட மோசடி புகாரின் மீது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் குழு ஒன்று நடத்திய விசாரணையில் கல்பனா சுரேஷ் போலி சான்றிதழைக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது ஊர்ஜிதமானது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பரிந்துரையை மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அவருக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்த அதிகாரி மீது எப்பொழுது நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்வியும் அங்கு எழுந்துள்ளது.