Skip to main content

எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம் கண்டிக்குமா? அன்புமணி ராமதாஸ்

Published on 29/09/2018 | Edited on 29/09/2018
 Palanisamy


 

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறினால் என்னவாகும் என்பதற்கு சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் நடத்தப்படும் அத்துமீறல்கள் தான் உதாரணம் ஆகும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை அமைத்துள்ள ஆளுங்கட்சியினர்  மீது புகார் கொடுக்கப்பட்டும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பதாகைகள் அமைக்கப்பட்டதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழாவும் சென்னையில் நாளை நடைபெறவுள்ளன. அரசு சார்பில் இந்த விழா நடத்தப்பட்டாலும், இது முழுக்க முழுக்க அதிமுக விழாவாகவே நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு ஆட்களை சேர்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களை அனுப்ப வேண்டும் என அவற்றின் நிர்வாகங்கள் மிரட்டப்படுவதாக மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்கனவே குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால் அதன்பிறகும் அதிமுகவினர் அடங்கவில்லை.
 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலை ஒட்டிய அண்ணா சாலையின் 1.1 கி.மீ நீளமுள்ள பகுதியில் மட்டும் ஒரு புறம் 89 பதாகைகள், மறுபுறம் 49 பதாகைகள் என மொத்தம் 138 பதாகைகள் அதிமுகவினர் சட்டவிரோதமாக அமைத்துள்ளனர். இந்த பதாகைகள் அனைத்தும்  நடைபாதைகளையும், சில மீட்டர் அகலத்துக்கு சாலையையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, 8 மின் விளக்கு கட்&அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ்  ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பதாகைகள் அமைப்பதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வளைத்து வளைத்து பதாகைகளை அமைத்துள்ளனர். விழா நடைபெறும் நந்தனத்தில் மட்டுமின்றி சென்னை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினரின் பதாகைகள் பொதுமக்களை மிரட்டுகின்றன.
 

இதனால் நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சாலைகளில் நடந்து செல்வதால் அவர்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, வாகனப் போக்குவரத்தின் வேகம் குறைந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பேருந்து நிறுத்தங்களும் பதாகைகளால் மறைக்கப்பட்டிருப்பதால் பேருந்துகளுக்காக மக்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பதாகைகளுக்கு  சென்னை மாநகராட்சியிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் புகார் மனு அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, பதாகைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது.
 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும், அமைச்சர்களும் மக்களுக்கான பணியாளர்கள் தான். அவர்கள் எவரும் வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தங்களின் விளம்பரப் பதாகைகளை அமைப்பதற்காக  மக்களுக்கு தொல்லை தரக்கூடாது. தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் விளம்பர மோகம் காரணமாக பதாகைக் கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.  உயர்நீதிமன்ற ஆணையை மீறி ஆளுங்கட்சியினர் பதாகைகளை அமைப்பது குறித்தும், அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் உயர்நீதிமன்றம் பலமுறை அதிருப்தி தெரிவித்துள்ளது.
 

ஆனால், அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டன. இதுவரை மொத்தம் 31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலுமே விதிகளை மிதித்து விளம்பர பதாகைகளை அமைப்பது, பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாகனங்களை மிரட்டி அழைத்து வருவது, மாணவர்களைக் கட்டாயப்படுத்தி விழாக்களில் பங்கேற்ற வைப்பது என உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட அனைத்து செயல்களையும் அதிமுகவினர் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
 

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே சட்டத்தை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதிமுகவினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் மக்கள் புரட்சியில் ஈடுபடக்கூடும். அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பதாகைகள் அமைக்கப்பட்டதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனி எந்த காலத்திலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் விதிகளை மீறி பதாகைகளை அமைக்க மாட்டோம் என்று அவர்களிடமிருந்து உத்தரவாதம் பெறவும் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்