குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரைகாங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது.மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை.

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரைமேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

puthukottai
இதையும் படியுங்கள்
Subscribe