Skip to main content

'தமிழகத்திலும் வயநாடுபோல் பேரிடர் நிகழ்ந்தால் தான் அரசு திருந்துமா?'-பாமக ராமதாஸ் கேள்வி

Published on 08/09/2024 | Edited on 08/09/2024
 'Will the government change only if there is a disaster in Tamil Nadu?'-pmk Ramadoss asked


'கன்னியாகுமரியில் தொடர்ந்து கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒருவேளை தமிழகத்திலும் வயநாடு பேரிடர் நிகழ்ந்தால் தான் திராவிட மாடல் அரசு திருந்துமா?' என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காலநிலை மாற்றத்தின் தீமைகள் குறித்தும், பேரிடர்களைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும்  தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது குறித்த அக்கறை எதுவும் இல்லாமல் குமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவளக் கொள்ளை கட்டுப்பாடின்றி தொடர்ந்து வருகிறது. இயற்கை நலனிலும், மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாமல், பேரிடரை விலை கொடுத்து வாங்கும் அத்துமீறல்களுக்கு, தமிழக அரசு மறைமுகமாக துணை போவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து கேரளத்திற்கும், பிற பகுதிகளுக்கும் மிக அதிக அளவில் கனிம வளங்கள் வெட்டி  எடுத்துக் கடத்திச் செல்லப்படுகின்றன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை விட கன்னியாகுமரி மாவட்டத்தில் வெட்டி எடுத்து கடத்தப்படும் கனிம வளங்களின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அதற்கு கனிமவளங்கள் தேவை என்று கூறி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மலைகளையும், மலைக்குன்றுகளையும் தகர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அவ்வாறு தகர்த்தெடுக்கப் படும் கனிமவளங்களும் கேரளத்திற்கு தான் கடத்திச் செல்லப்படுகின்றன என்பது வேதனையான உண்மை.

திருவட்டாறு கல்லுப்பாலம் பகுதியில் தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவளக் கொள்ளை மிக அதிகமாக நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான  சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படும் நிலையில், கல்லுப்பாலம் பகுதியிலும் அதே அளவில் கனிமவளக் கொள்ளையை நடத்த கனிமவளக் கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அதற்காக அதிக எண்ணிக்கையிலான சரக்குந்துகள் சென்று வருவதற்கு வசதியாக அப்பகுதியில் இராட்சத எந்திரங்களைக் கொண்டு புதிய பாதைகளை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

குமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இதே அளவில் கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடந்தால், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நடந்தது போன்ற நிலச்சரிவு குமரி மாவட்டத்திலும் நடக்கலாம் என்றும், அவ்வாறு நடந்தால் வயநாடு பகுதியில் ஏற்பட்டதை விட மிகப்பெரிய அளவில் பேரழிவு ஏற்படலாம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அதுகுறித்த எந்த அக்கறையும் இல்லாமல் கனிமவளக் கொள்ளை நடைபெறுகிறது. அதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளும், அரசு எந்திரமும் கனிம வளக்கொள்ளைக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அப்பகுதிகளில் தொடர்ந்து மலைக்குன்றுகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே பணியாற்றிய அதிகாரிகள் அனுமதி கொடுத்ததாக இப்போதுள்ள அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ரூ.10 லட்சம் தண்டம் விதித்தது. அதன்பிறகும் அந்தப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை கட்டுப்பாடின்றி நடைபெறுவது ஒருபுறமிருக்க, சில இடங்களுக்கு மட்டும் கொடுத்த அனுமதியை வைத்துக் கொண்டு மாவட்டம் முழுவதும் கனிமக்கொள்ளை நடைபெறுகிறது.

வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட காட்சிகளை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் பதறுகிறது. நிலச்சரிவால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள், கொடூரமான உயிரிழப்புகள் ஆகியவற்றை நினைத்தால் உண்ணவும் முடியாது; உறங்கவும் முடியாது. அப்படி ஒரு பாதிப்பு குமரி மாவட்டத்தில் நிகழ்ந்தால் என்னவாகும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், இதுகுறித்தெல்லாம் சிந்திக்கவும், செயல்படவும் தமிழக அரசுக்கு நேரமும் இல்லை; அக்கறையும் இல்லை. மக்கள் மீதான தமிழக அரசின் பற்று இவ்வளவு தான்.
 

பேரிடர்கள் நிகழ்ந்த பின் புலம்புவதை விட, ஏற்படுவதற்கு முன்பே தடுப்பது தான் அறிவார்ந்த அரசின் கடமை ஆகும். தமிழ்நாட்டில் நடைபெறுவது அறிவார்ந்த அரசாக இருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தை  பாதுகாக்கும் வகையில் அங்கு நடைபெறும் கனிமவளக் கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரையின்படி மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுக்காக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கனிமவளங்களை வெட்டி எடுக்க வழங்கப்பட்ட உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தின் இயற்கை அழகை அரசு போற்றிப் பாதுகாக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.