ADVERTISEMENT

புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா? - குழப்பத்தில் பக்தர்கள்..! 

04:31 PM Apr 10, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் (முன்பு விழுப்புரம் மாவட்டம்) உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அரவான் களப்பலி திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே திருநங்கைகள் வருவது வழக்கம்.

அதிலும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல் நாடுகளில் இருந்தும் திருநங்கைகள் அலையலையாக இந்த திருவிழாவில் வந்து கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் துவக்க நாள் முதல் 7 கிராம மக்கள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடத்துவார்கள். பிறகு சாகை வார்த்தலுடன் விழா நடக்கும் இக்கோவிலுக்கு திருநங்கைகள் பொதுமக்கள் என லட்சக்கணக்கில் கூடுவார்கள்.

திருவிழா ஆரம்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பே திருநங்கைகளுக்கு அழகிப் போட்டிகளும், அறிவுத்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு திறமையான திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது உண்டு. இவர்களை காண வேண்டும் என்ற ஆவலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் கூட்டம் கூவாகத்தில் மொய்க்கும். திருநங்கைகள் அலங்காரத்தில் தேவலோக மங்கைகளை போல அலங்கரித்து வருவார்கள். அவர்களோடு இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதும் அவர்களிடம் கொஞ்சி விளையாடுவதும் எனத் திருவிழா களைகட்டும்.

இளம் காளையர்களின் வருகையால் திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். திருநங்கைகளைப் படம் பிடிப்பதற்காக பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட பிரமாண்ட திருவிழா கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் திருவிழா நிறுத்தப்படுமா, நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் தமிழக அரசு இன்று 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இதனால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்று திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் திருவிழா ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகளிடம் இருந்து முறையான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றனர். மேலும் அரசு திருவிழாவை ரத்து செய்யுமா என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள். கரோனா நோய் இரண்டாவது அலைவரிசை பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதனால் இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது என்று மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பரவல் காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT