/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hills-station-in.jpg)
மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளைத் தொடர்வது குறித்து, மத்திய அரசிடம் மூன்று நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மாநிலங்களுக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் மக்கள் மற்றும் சரக்குப்போக்குவரத்துக்கு இ- பாஸ் ஏதும் தேவையில்லை என, கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த உத்தரவை மீறும் வகையில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களும், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை ஸ்தலங்களுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த எழில்நதி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, அமலில் உள்ள இ.பாஸ் நடைமுறைக்கு பதிலாக, இ.ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த ஆலோசித்து வருகிறோம்.ஆனால்,இறுதி முடிவெடுக்கவில்லை. மேலும், மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும். வெளியிலிருந்து அங்கு செல்பவர்கள் மூலமாக மலைப்பகுதி மக்களுக்கு தொற்று பரவினால் ஆபத்தான சூழல் உருவாகும். அதனால், மாவட்ட பேரிடர் மேலாண்மை அமைப்பு மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மலைப்பகுதிகளில் இ.பாஸ் நடைமுறைகளைத் தொடர்வது குறித்து, மத்திய அரசிடம் மூன்று நாட்களில் விளக்கம் பெற்று, விரிவாக விளம்பரப்படுத்த தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)