நிறைவேற்றப்படுமா எஸ்.ஐ.க்களின் கோரிக்கை

Will the demand of SIs be fulfilled?

ஏனைய அரசுத்துறைகளில் பணியில் சேருபவர்களுக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைத்துவிடுகிறது. தமிழ்நாடு காவல்துறையிலோ இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் நேரடி எஸ்.ஐ.க்களாக தேர்வு செய்யப்படுபவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. ‘2011-ஆம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.க்களாக தேர்வுசெய்யப்பட்ட எங்களுக்கு 12 ஆண்டுகள் கடந்தும் இதுநாள் வரை ஒரு பதவி உயர்வு கூட வழங்கப்படவில்லை. முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்’என மனுக்களை அனுப்பிக் காத்திருக்கின்றனர் 1000 எஸ்.ஐ.க்கள்.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாகசமீபத்தில் காவல்துறையில் நடைபெற்ற பொன்விழா ஆண்டு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காவலர்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட, காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியும்முதல்வருக்குபாராட்டும் குவிந்தது.

இந்நிலையில் நடந்துகொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவலர்களின் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதமும் தங்களுக்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுவினை முதல்வருக்கு அனுப்பியுள்ளனர்.

"சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் நிலைநாட்ட இளையவர்களால் தான் விரைவாகவும் வேகமாகவும் செயல்படமுடியும் என்கின்ற காரணத்தால் தமிழ்நாடு காவல்துறையில் நேரடியாக எஸ்.ஐ.க்களாக நாங்கள் தேர்வு செய்யப்படுகிறோம். அந்தளவிற்கு காவல் நிலையத்தில் எங்களின் பங்கு மிக முக்கியமானது. 2011-ஆம் ஆண்டு மட்டும் 1095 நபர்கள் நேரடி எஸ்.ஐ.யாக பணிப் பொறுப்பேற்றோம். இதில் 300-க்கும் அதிகமானோர் பெண் எஸ்.ஐ.க்கள். இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியில் சேருபவர்களுக்குக்கூட 10 வருடத்தில் பணி உயர்வு கிடைத்துவிடுகிறது. பணிப் பொறுப்பேற்று இதுவரை 12 ஆண்டுகளாகியும் எங்களுக்கு புரமோஷன் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டிலுள்ள எஸ்.ஐ. தலைமையிலான 423 ஸ்டேஷன்களில் நடைபெறும் மரணத்திற்கு ஒப்பான வழக்குகளை, எஸ்.ஐ. தலைமையிலான ஸடேஷன் என்றாலும் எஸ்.ஐ. விசாரணை செய்யக்கூடாது என்பதால் அருகிலுள்ள ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்று அதனை விசாரித்து வருகிறார். இதனால் வேலைப்பளு அதிகமாவதாலும், வழக்குகள் தேக்கமாவதாலும் அந்த 423 ஸ்டேஷன்களிலுள்ள நிலுவை வழக்குகள் குறித்த ஆய்வினைச் செய்ய உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால் ஏனோ அது கிடப்பில் போடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஸ்டேஷன்களையே இன்ஸ்பெக்டர் ரேஞ்சிற்கு மாற்றினால் தற்பொழுது புரோமோஷனுக்கு காத்துள்ள எஸ்.ஐ.க்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஆவார்கள். இதனால் வழக்குகளும் குறையும். எங்களுக்கு பதவி உயர்விற்கான உத்தரவை முதல்வர் வழங்குவார்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தென்மாவட்ட எஸ்.ஐ. ஒருவர்.

police
இதையும் படியுங்கள்
Subscribe