
'பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா?' என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிப்பதை எதிர்த்து சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, 'சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் பல, சாதி பெயருடன் உள்ள நிலையில் அங்கு உள்ளே ஆசிரியர் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடம் நடத்துவது மிகப்பெரிய முரண்' என்றார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இதுபோன்ற வழக்கில் மதுரை அமர்வு சாதி சங்கங்கள் குறிப்பிட்ட சாதியினரின் நல்லனுக்கானது என்ற சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்த பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இது தொடர்பாக சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது' என்றார்.
எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை என தெரிவித்த நீதிபதி, 'விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் பெயர்களில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளது' என அதிருப்தி தெரிவித்தார். பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டு இருக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
எப்படி இருந்தாலும் சாதி பெயர் சேர்க்கப்பட கூடாது என வலியுறுத்திய நீதிபதி, 'பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்கள் கூட சாதிப் பெயர்களை தாங்கி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.