ADVERTISEMENT

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் சலுகைகள் ரத்தாகுமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

12:38 PM Nov 28, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 28) துவங்கியது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு முகாமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்று முதல் தமிழகமெங்கும் 2811 இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம், அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டிற்குள்ளாக பயன்படுத்தக்கூடிய குடிசைகள், 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான மானியம் உள்பட ஏற்கனவே அரசின் இலவச மின் திட்டங்கள் என்னென்ன இருக்கின்றதோ, அவை தொடர்ந்து பின்பற்றப்படும். அரசு வழங்கக்கூடிய மானியங்களுக்கான அனைத்து நடைமுறைகளிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

உண்மைக்கு மாறாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதால் இவையெல்லாம் ரத்தாகிவிடும் என்று தவறான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறது. தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறேன். ஏற்கனவே இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் என்பது, எவ்வளவு பேர் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள்? ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது? இப்படி எவ்வித தரவுகளும் மின் வாரியத்திடம் இல்லை. ஏறத்தாழ ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டும்தான் மின்சார வாரியத்தில் இருந்தன.

மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல், புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பையும் ஆதார் எண்ணையும் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் மின் இணைப்பும் ஆதாரும் இணைக்கச் செல்லும் பொழுது செல்பேசிகளை எடுத்துச் சென்றால் ஓடிபி வரும் பொழுது காலதாமதம் ஆகாமல் வேகமாக இணைக்க முடியும்.

மின்வாரியத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்ய வேண்டும். 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. கடந்த வருடம் மட்டும் 16 ஆயிரத்து 511 கோடி வட்டி மட்டும் கட்டியுள்ளோம். இந்த இழப்புகள் பொதுமக்களின் சலுகைகளாக இருக்க வேண்டும். இந்த இழப்புகளை எல்லாம் சரி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT