ADVERTISEMENT

'நிதி நிலைமை சீரடைந்ததும் பரிசீலிக்கப்படும்' - தங்கம் தென்னரசு கோரிக்கை

06:47 PM Feb 13, 2024 | kalaimohan

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளது.

ADVERTISEMENT

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை விட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT