
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று (20.06.2021) தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வகை மூன்றில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிகப்படியான தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தன. 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் பஸ் மற்றும் மெட்ரோ சேவை தொடங்கியுள்ளது.
சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 9:30 வரை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 35 பணிமனைகளில் இருந்து முதற்கட்டமாக 1,400 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்பட இருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வகை ஒன்றில் உள்ள 11 மாவட்டங்களுக்கு எவ்வித கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''ஏற்கனவே வாங்கிய ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதிவரை செல்லும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு என மூன்று வகை வண்ணங்களில் இலவச பஸ் டிக்கெட் விநியோகம் செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.