Skip to main content

இரை தேடி வந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழப்பு

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

Wild elephant passed away electric shock in paddy field

 

நெல்லை மாவட்டத்தின் கல்லிடைக்குறிச்சியை ஒட்டிய மணிமுத்தாறு மலைவனப்பகுதியில் வசித்து வருகிற யானை, கரடி, மிளா, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீருக்காகவும், இரை தேடியும், சில நேரங்களில் பாதை தவறியும், மலைப் பக்கமுள்ள கிராமங்களில் புகுந்துவிடுவதுண்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தரையிறங்கிய ஆண் யானை ஒன்று மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமங்களில் இரை தேடி அலைந்திருக்கிறது.

 

இந்த நிலையில் அந்த யானை நேற்று காலை சிங்கம்பட்டி பீட் -2 பிரிவில் உலுப்படிப்பாறை பீக்கம்பள்ளம் எனுமிடத்திலுள்ள பனங்காட்டிற்குள் புகுந்திருக்கிறது. அங்குள்ள பெரிய பனை மரத்தின் குருத்தோலைகளைத் தின்னும் பொருட்டு பனைமரத்தை முட்டி வேரோடு சாய்க்க முயன்றிருக்கிறது. ஆனால் எதிர்பாராத வகையில் பனை மரம் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது சாய, இதில் திடீரென்று மின் கம்பி அறுந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. சம்பவ இடத்திலேயே யானை துடி துடித்துப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

 

தகவல் சென்று, களக்காடு முண்டன்துறை இணை இயக்குநர் செண்பகப்பிரியா, வனத்துறையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். புலிகள் காப்பக டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பிரேதப் பரிசோதனை நடத்தினர். பின்னர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பெரிய குழி தோண்டி­ முறைப்படி யானையைப் புதைத்தனர். இறந்த யானை சுமார் 40 முதல் 45 வயதிருக்கலாம் என்கிறனர் வனத்துறையினர். உணவுக்காக வந்த மிகப் பெரிய யானை மின்சாரம் தாக்கி பரிதாபமாக மடிந்தது சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நெல்லையில் ஸ்கோர் செய்த பா.ஜ.க; கொந்தளிக்கும் திமுகவினர்

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
DMK leadership angry as BJP vote count increased in Nellai

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது திருநெல்வேலி மக்களவைக்குப் போட்டியிட்ட தி.மு.க.வின் கூட்டணி சார்பில் நின்ற தி.மு.க.வின் ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று எம்.பி.யானார். அவரை எதிர்த்து பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க.வின் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்றார்.

தற்போதைய திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 வாக்குகள் (கடந்த தேர்தலை விட 20,327 வாக்குகள் குறைவாக) பெற்று வெற்றி கண்டார். அவரோடு தனியாக மல்லுக்கு நின்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் கிட்டத்தட்ட மலைக்க வைக்கிற அளவுக்கு கிராசிங்காக 3,36,676 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றவாக்குகளின் கணக்கு பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், தமிழகம் முழுக்க 39+1 - 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 100க்கு 100 என்று 40 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாக அள்ளினாலும், நெல்லையில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன், கூட்டணி பலமின்றி ஒற்றை நபராகக் களத்தில் இத்தனை (336676) அளவுக்கு க்ராசிங்காக வந்ததை திகைப்புடன் பார்க்கிறதாம்.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

தமிழகத்தின் பிற தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட்டு வாக்குகளைப் பெற்றாலும் குறிப்பாக திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் இந்த அளவுக்கு ரீச்சானதின் பின்னணியை ஏற்கனவே தி.மு.க. தலைமை சந்தேகக் கண்களோடு தான் ஆரம்பம் முதலே கண்காணித்து வந்தது. இதன் பின்னணியில் உள்ளடி இருப்பதை மேலோட்டமாக உறுதிபடுத்திய தி.மு.க.வின் தலைமை, தேர்தல் ஆரம்ப காலகட்டங்களில் நடந்தவைகளையும், கட்சியின் குறிப்பிட்ட தரப்பினரின் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட தொய்வுகள் பற்றி நெல்லை மாநகர மாவட்ட கட்சியினர் தலைமைக்கு அனுப்பிய புகார்கள் என்று இரண்டையும் ஒப்பீடாக எடுத்துக் கொண்டு விசாரணைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதால் நெல்லை மாநகர தி.மு.க அளவில் தலைமையின் நடவடிக்கை பாயலாம் என்ற கலக்கமிருப்பதைச் சுட்டிக்காட்டுகிற தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்களே, இனி வரும் காலத்தில் அது உள்ளடிகளில்லாத தேர்தல் பணிகளுக்கு உத்தரவாதமாகும் என்பவர்களே திருநெல்வேலி எம்.பி. தேர்தலில் தி.மு.க.வில் நடந்த உள்குத்துகளைப் பற்றி விவரித்தார்கள்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நேரத்தில் நெல்லையில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. ஏனெனில் அது ஒற்றையாக களம் காண்கிற அளவுக்கு தொகுதியில் பேஸ்மெண்ட் கிடையாது என்று பரவலாகப் பேசப்பட்டது. இதற்கிடையே நான் தான் பா.ஜ.க.வின் திருநெல்வேலி வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டதுமில்லாமல் ஸ்ட்ரெயிட்டாக தேர்தல் பிரச்சாரத்திலிறங்கியதை பிற கட்சிகள் வியப்புடன் பார்த்தன. பா.ஜ.க.விற்கான தகுதியான வேட்பாளர்கள் சிக்காமல் போனதால் வேறு வழியின்றி பா.ஜ.க. நயினார் நாகேந்திரனை வேட்பாளராக அறிவிக்க வேண்டிய நிலை.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

தேர்தலில் ஜெயித்தால் மத்திய அமைச்சராகி விடலாம் என்ற திட்டத்தில் அதற்கான மூவ்களை மேற்கொண்ட நயினார் கரன்சியை தாமிரபரணியாய் தொகுதியில் ஓடவிட்டவர், தனக்கான இமேஜை அதிகரித்துக் கொள்ள நெல்லை எம்.பி. தொகுதிக்குட்பட்ட நெல்லை அம்பை என்று இரண்டு தொகுதிகளிலும் அடுத்தடுத்து பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தையும் நடத்தி பிரம்மாண்டப் படுத்தியிருக்கிறார். மேலும் தனக்கான வாக்குபலத்தை அதிகரித்துக் கொள்ள தொகுதியில் தான் சார்ந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைத்தால் மேக்சிமம் ரீச் ஆகிவிடலாம், பிற சமூக மக்களையும் தன் பக்கம் திருப்பினால் வெற்றிக் கோடு அருகில் என்ற ப்ளானில் அம்பை தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவின் துணையுடன் ஸ்வீட் பாக்ஸ்களை தேவையான அளவிற்கு ஏரியா சார்ந்த முக்கிய புள்ளிகளின் துணையோடு இறக்கியவர் ஓட்டுக்கு முன்னூறு என்ற லெவலிலும் கவனிப்பு.

இதனால் அ.தி.மு.க. அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் பண்ணையார் சார்ந்த பிரிவு சார்ந்தவர்களின் மறைமுகமான ஆதரவும் கிடைத்திருக்கிறது. இந்த திரை மறைவு காய் நகர்த்தலில் நெல்லை தி.மு.க. புள்ளிகளும் அடங்கியது பற்றிய தகவல்களுடன் நெல்லை ஜங்ஷன் பகுதியின் தி.மு.க. நிர்வாகியான கடவுள் பெயரைக் கொண்ட அவர், பண்ணையாருக்காக பகிரங்கமாக வேலை பார்த்தது பொறுப்பு அமைச்சருக்குத் (தங்கம் தென்னரசு) தெரிந்தும் கூட அவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை போன்ற தொகுதியில் நடக்கிற அனைத்தும் புகாராகக் கட்சித் தலைமைக்குப் போயிருக்கிறது. அத்துடன் நெல்லை தொகுதியில் பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்ற பிம்பம் உருவானது. இதையடுத்தே அலர்ட் ஆன தி.மு.க.வின் தலைமை, நெல்லை தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரஸ் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தொகுதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன. இறுதிக் கால கட்டமான வாக்குப் பதிவு நாளின் போது கூட பாளை, அதற்குட்பட்ட மேலப்பாளையம் பகுதிகளின் வாக்குச் சாவடிகளில் காலை முதலே தி.மு.க.வின் பொறுப்பாளர்களின் தலை காணாமல் போனதை வாய்ப்பாக்கிக் கொண்ட பண்ணையார் தரப்பினர் ஓட்டுக்கான பட்டுவாடாவை தடையின்றி சரசரவென முடித்திருக்கின்றனர்.

DMK leadership angry as BJP vote count increased in Nellai

இதனால் நெல்லையில் பா.ஜ.க. கரையேறும் என்ற பேச்சுக்கள் கனமாக அடிபட்டது. எதிர்பார்ப்புகள் பல்சை எகிற வைத்தன. தி.மு.க.வின் தலைமையைக் கூட யோசிக்கவைத்தது. இப்படியான பா.ஜ.க. பண்ணையாரின் ஜெகஜ்ஜால வித்தை காரணமாகவே திருநெல்வேலி தொகுதி யாருக்கு என்ற தவிப்பிற்கிடையே அம்பையின் ஒரு பகுதி, நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட தொகுதிகள் முழு அளவில் கை கொடுக்க தி.மு.க.வின் கூட்டணியான காங்கிரசின் ராபர்ட்புரூஸ் 5,02,296 வாக்குகள் வெற்றிபெற்றிருக்கிறார். 3,36,676 என எதிர்பார்க்காத அளவுக்கு வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனோ, நெல்லை சட்டமன்ற தொகுதியில் எங்களுக்கு சற்று கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ள போதிலும் பாளை சட்டமன்ற தொகுதியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் எங்களுக்கு கிடைத்துள்ளன என்று தெம்பாகவே சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

இப்படி தவிப்பிற்கிடையே நெல்லை பாராளுமன்றத்தை தி.மு.க. கூட்டணி கைப்பற்றினாலும் இதே தவிப்பும், படபடப்பும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரக் கூடாது. அதற்குள்ளாக தலைமை, மாநகர கட்சியில் கழித்தல் கூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தயார்படுத்த வேண்டும், என வேதனையும் கொதிப்புமாய் வெளிப்படுத்துகிறார்கள் தி.மு.க.வினர்.

Next Story

யானைகள் உயிரிழப்பு சம்பவங்கள்; தமிழக மின் துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
nn

மின்வேலியில் காட்டு யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின் வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பது அதிகமாகி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கக் கூடிய டிவிஷன் பென்ஷன் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

'மின்வேலியில் தொடர்ந்து யானைகள் இப்படி சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும்; இதற்கான டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. ஏன் இதற்கு இவ்வளவு காலதாமதம் ஆகிறது?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் 'யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது. நிதி ஒதுக்கீடு தொடர்பான ஒப்புதல் மட்டும் நிலுவையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்ததால் இவை தாமதமானது' எனத் தெரிவித்தார். யானைகள் தொடர்ந்து மின்வேலியில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க அரசு தீவிரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தமிழக மின்வாரியத்திற்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும்' என எச்சரித்தனர்.