‘என்னா வெயிலு...’ - காட்டு யானையின் ஆனந்தக் குளியல்

wild elephant can bathe in water under the influence of heat

‘மக்களே..மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெளியே வரவேண்டாம்’ என்று அரசின் மாவட்ட நிர்வாகமே மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அடிக்கிற வெயிலுக்கு மனிதர்கள் என்றும் விலங்குகள் என்றும் பாகுபாடு கிடையாதே. இதனால் பரிதவித்துப் போன காட்டு யானை ஒன்று தண்ணீரைக் கண்டதும் ஆனந்தக் குளியல் போட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லைப்புறமான தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டி கேரளாவின் ஆரியங்காவு நகரமிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அந்தப் பகுதியான ஆரியங்காவு பஞ்சாயத்திற்குட்பட்ட மலைப்பகுதியான அம்பநாடு அரண்டல் பகுதியில் அடர் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அந்தமலைப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளிருக்கின்றன.

கடுமையான கத்தரி வெயில் காரணமாகவும் கோடைக்காலம் என்பதாலும் தண்ணீர் மற்றும் உணவுக்காக வனவிலங்குகள் தரையிறங்குவதுண்டு. நேற்று முன்தினம் அரண்டல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு காட்டுயானை ஒன்று தண்ணீர் தேடி வந்திருக்கிறது. பள்ளத்தின் ஒரு பகுதியின் கிணற்றுப் பகுதியில்அகண்ட ஆழமான குளத்தைக் கண்டதும் குஷியாகிப் போன யானை தண்ணீரிலிறங்கி மனம் போன போக்கில் மூழ்கியும் நீச்சலடித்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனந்தக் குளியல் போட்டிருக்கிறது.

நீண்ட நேரம் யானை நீச்சலடிப்பதை அந்தப் பகுதியின் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். அது சமயம் யானை தனது தும்பிக்கையால் தண்ணீரைச் சிதறடித்து மகிழ்ந்தது. பின்னர் கிளம்பிய யானை, அருகிலுள்ள பலா மரத்தின் பலாகாய்களைப் பிடுங்கித் தின்று பசியாறியுள்ளது. சில வேளைகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகவும் வருவதுண்டு. “அடிக்கடி ரவுண்ட் வரும் காட்டு யானைகள் ஒரு சில வேளைகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் தாக்குவதும் தொடர் சம்பவமாயிறுச்சி. எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்”என்று கூறினார் அரண்டல் பகுதி தேயிலைத்தோட்ட தொழிலாளி ஒருவர். வெயிலின் அகோரம் பலமான யானையையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.

elephant
இதையும் படியுங்கள்
Subscribe