Skip to main content

இன்சூரன்ஸ் பணத்திற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
murder

 

கணவன் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தருமபுரி அருகே நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்தவர் மாதேசன். இவர் தேன்கனிக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 27ம் தேதி மாதேசன் தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் இறந்து கிடந்தார்.

 

மாதேசன் விபத்தில் இறந்ததாகக் கருதி போலீசார் முதலில் இதனை விபத்து வழக்காக விசாரித்தனர். மாதேசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு வந்த மாதேசனின் மனைவி ரேவதி கணவன் இறந்த செய்தி கேட்டு கதறி அழாமல் போலீசாரிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்டுள்ளார்.

இறப்பு சான்றிதழ் கேட்டு வந்த மகன்:

இதனால் ரேவதி மீது சந்தேமடைந்த போலீசார் காரிமங்கலம் காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து ரேவதியை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே ரேவதியின் மூத்த மகன் 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று மாதேசனின் இறப்பு சான்றிதழை கேட்டுள்ளார்.

 

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்:

தந்தை இறந்த 1 வாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கேட்ட மாதேசனின் மகன் யோகேஷ் மீது பணியில் இருந்த போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து யோகேஷையும், ரேவதியையும் அழைத்து காரிமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் செய்திகள் வெளியாகின.

 

லட்சக்கணக்கில் இன்சூரன்ஸ்:

மாதேசனுக்கு குடிப்பழக்கத்துடன் உடல்நலக்குறைவும் இருந்தது. அவர் விரைவில் இறந்துவிட வாய்ப்புள்ளதாக கருதி அரசு இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ. 10 லட்சத்திற்கும், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ. 45 லட்சம் மதிப்பில் ஒரு பாலிசியும் கணவர் பெயரில் எடுத்துள்ளார் ரேவதி. இந்த பாலிசிகளுக்கு வாரிசாக தன்னை சேர்த்துள்ளார் ரேவதி.

 

மனைவி கள்ளத்தொடர்பை கண்டித்த கணவன்:

ரேவதிக்கும், ஜெயபிரகாஷ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதை அறிந்து மாதேசன் கண்டித்துள்ளார். இதனால் ஜெயப்பிரகாஷ், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரேவதி திட்டமிட்டு மாதேசனை கொலை செய்துள்ளார்.

 

கொலையில் தொடர்புடையவர்கள் கைது:

கடந்த 27ம் தேதி மாதேசனை கழுத்தை நெரித்து கொன்று தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் உடலை வீசிவிட்டு வந்துள்ளனர். ரேவதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன் மற்றும் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேவதியிடமும், யோகேஷிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

- அரவிந்த்

 

சார்ந்த செய்திகள்