
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள புதூர், நஞ்சியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (63). இவரது மனைவி ஈஸ்வரி (58). இவர்களுக்கு 3 மகள்கள். அனைவரும் திருமணமாகி தாராபுரம் மற்றும் தர்மபுரியில் அவர்களது கணவருடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாலுவும், ஈஸ்வரியும் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை, நாமக்கல்பாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்குக் குடி வந்தனர். பாலு, அப்பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான பாலு தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவி ஈஸ்வரியை அடித்துத் துன்புறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டுக்கு வந்த பாலு, ஈஸ்வரியிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி, வீட்டில் இருந்த அரிவாளால் பாலுவை வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று இரவு ஈஸ்வரியைக் கைது செய்தனர். போலீசார் ஈஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், “எனது கணவர் பாலு தினமும் மது அருந்திவிட்டு இரவில் வீட்டுக்கு வந்து என்னை அடித்து துன்புறுத்துவார். இதனால் நான் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தேன். இந்நிலையில் நேற்று முன்தினமும் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன்” என்றார். இதையடுத்து ஈஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெண்கள் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.