
கடலூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. அதேபோல் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் உயிரிழுந்து வரும் அவலமும் தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆக்சிஜன் வசதியோடு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. அவருடன் அவருடைய மனைவி கயல்விழி உதவிக்கு இருந்து வந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் கயல்விழி சாப்பிடுவதற்காக வெளியே வந்ததாகவும் திரும்பி செல்லும் பொழுது மருத்துவர்கள் கணவருக்கு வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜனை எடுத்து விட்டதாகவும், அதனால் தன் கணவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறி கதறி அழுதார். ஆக்சிஜனை அகற்றிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூச்சலிட்டார்.
பின்னர் போலீசார் மற்றும் மருத்துவ நிர்வாக ஊழியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்த உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர்தான் தங்கள் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்வோம் என கூறியுள்ளனர். ஆனால் கயல்விழி இறந்த கணவரின் உடலை கட்டி பிடித்தபடி உடலை தரமாட்டேன் என கூறியதால் சடலம் 2 மணிநேரத்திற்கு மேல் அவசர சிகிச்சை பிரிவிலேயே இருந்தது. பின்னர் கயல்விழியை சமாதானப்படுத்தி உடலை உடற்கூறு ஆய்வு செய்ய கொண்டு சென்றனர்.
ஆக்சிஜன் அகற்றப்பாட்டதால் கணவர் உயிரிழந்ததாக மனைவி கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.