/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_101.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஆவுடையார்கோயில் அருகில் உள்ள மைனாக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(36). இவர் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனது மனைவி ராஜலெட்சுமி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் புரூணையில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு உறவினர்களிடம் கடன் வாங்கி வேலைக்கு சென்றார்.
இதையடுத்து சுரேஷ்க்கு சில மாதங்களில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் 16.09.2022 அன்று சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட நிலையில் காய்ச்சல் குணமாகாமல் கோமா நிலைக்கு போய்விட்டதாக தகவல் கூறியுள்ளனர். கட்டுமான நிறுவன முதலாளி ஜாபர் அலி சுரேஷ்க்கான சிகிச்சை பற்றி அடிக்கடி தகவல் கூறியுள்ளார். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தனது கணவரை இந்தியாவிற்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். ஆனால் சிகிச்சையில் இருப்பவரை இந்தியா அழைத்துவர முடியாத நிலையில் உள்ளார் என தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பர் 25 ந் தேதி சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ராஜலெட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தன் கணவர் தங்களை விட்டு பிரிந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு கதறி அழுத ராஜலெட்சுமி கணவரை உயிருடன் அழைத்து வர முடியவில்லை. தற்போது உயிரிழந்த நிலையிலாவது தனது கணவர் உடலை மீட்டுத் தாருங்கள் என மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ராஜலெட்சுமியின் மனுவை சென்னையில் உள்ளவெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையர் அலுவலகத்திற்கும் பொதுத்துறை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். ஆனால் 10 நாட்களாகியும் சுரேஷ் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவில்லை. நிறுவன முதலாளியும் சுரேஷ் உடலை வாங்கி அனுப்பவில்லை. இதனால் சுரேஷ் குடும்பம் ஆழ்ந்த சோகத்தில் இருப்பதுடன் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இது குறித்து ரமேசின் உறவினர்கள் கூறும் போது.. சிகிச்சையின் போது செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன நிறுவன முதலாளி சுரேஷ் இறந்ததும் உடலை வாங்கி அனுப்புவதாகக் கூறினார். ஆனால் தற்போது மருத்துவச் செலவு ரூ.24 லட்சம் கட்டினால் தான் சடலத்தை பெற்று அனுப்ப முடியும் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் கிடைத்ததும் நான் பணம் கட்டி சடலத்தை வாங்கி அனுப்புகிறேன். இல்லை என்றால் உறவினர்கள் பணம் கொடுத்தால் சடலத்தை வாங்கி அனுப்புவதாகக் கூறியுள்ளார்.
10 நாட்களுக்கு மேலாக சுரேஷ் சடலத்தைப் பார்ப்பதற்காக மனைவி, குழந்தைகள், உறவினர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். ஆகவே மத்திய, மாநில் அரசுகள் ஒரு ஏழைப் பெண்ணின் கோரிக்கையை ஏற்று அவரது கணவரின் சடலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)