கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி! 

Wife pours boiling oil on husband

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் - முத்துலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். பாலசுப்ரமணியன் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அண்மைக் காலமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக கணவரிடம் கோபித்துக் கொண்டு முத்துலட்சுமி தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதுகுறித்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் காரணமாக இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து முத்துலட்சுமி கணவர் பாலசுப்ரமணியனிடம் கடந்த நான்கு நாட்களாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கணவர் பாலசுப்ரமணியன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கும் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி தான் ஏற்கனவே கொதிக்க வைத்திருந்த சுடான எண்ணெய்யை பாலசுப்ரமணியனின் இடுப்பு கீழ் பகுதியில் ஊற்றியுள்ளார். இதனால் பாலசுப்ரமணியனுக்கு இடுப்பு பகுதியில் இருந்து கால் வரையில் வெந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரது சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மனைவி முத்துலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் பாலசுப்ரமணியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது முத்துலட்சுமிக்கு தெரியவந்துள்ளதாகவும், அதுகுறித்து பாலசுப்ரமணியனிடம் தகராறு செய்ததாக போது கொதிக்கும் எண்ணெய்யை அவர் மீது ஊற்றியதாகவும் கூறப்படுகிறது.

Husband and wife police thirunelveli
இதையும் படியுங்கள்
Subscribe