Advertisment

‘தொடர்பை கைவிட சொன்னாள்... உயிரோடு எரிச்சுட்டேன்!’ - பைனான்ஸ் அதிபரின் பகீர் வாக்குமூலம்

Wife passed away police arrested her husband near Sankagiri!

சங்ககிரி அருகே, தவறான தொடர்பை கைவிடும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்ததால், ஆத்திரத்தில் என் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டேன் என பைனான்ஸ் அதிபர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் (62). விவசாயி. மேலும், உள்ளூரில் வட்டித்தொழிலும் செய்து வருகிறார். இவருடைய மனைவி கவுசல்யா (50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கவுசல்யா, வீட்டின் முன்பகுதியில் சின்னதாக ஒரு மளிகை நடத்தி வந்தார். இந்நிலையில் சேகருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்து வந்தது.

Advertisment

இதையறிந்த அவருடைய மனைவி, ஊரார் தவறாக பேசுவதால் உடனடியாக அந்தப் பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி கூறி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) இரவு 9 மணியளவில், வீட்டில் இருந்த கவுசல்யா உடலில் தீப்பிடித்த நிலையில், அபயக்குரல் எழுப்பியபடி வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்தார்.

அவர் உயிருக்குப் போராடி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்தனர். கவுசல்யாவை உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கவுசல்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரிடம், மாஜிஸ்ட்ரேட் மரண வாக்குமூலம் பெற்றார். அப்போது அவர், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தவறான தொடர்பை கைவிடும்படி கூறி வந்ததால், அவர் தன்னை தாக்கியதோடு, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்றார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு, மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சங்ககிரி காவல்நிலைய காவல்துறையினர் சேகர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ''நான் இன்னொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகி வந்தேன். அதை என் மனைவி கண்டுபிடித்து விட்டார். அந்த தொடர்பை விட்டுவிடும்படி அடிக்கடி கூறி தகராறு செய்து வந்ததால், ஆத்திரம் தாங்காமல் எரித்துக் கொன்று விட்டேன்'' என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சேகரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe