Wife passed away police arrested her husband near chidambaram

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). கொத்தனார் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா (32). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் சஞ்சீவி என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். ஆனந்துக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், நேற்று இரவு இதேபோல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் உருட்டுகட்டையால் தீபாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் தீபா உயிரிழந்தார். மனைவி இறந்தது தெரியாமல் போதையில் அவரது உடல் அருகிலேயே ஆனந்தும் படுத்து தூங்கிவிட்டார்.

Advertisment

இன்று காலை அருகில் இருந்தவர்கள் ஆனந்த் வீடு திறக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்தனர். ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ரத்த காயங்களுடன் தீபா பிணமாக கிடப்பதும், அருகில் ஆனந்த் தூங்கிகொண்டிருந்ததும் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் கணவனே மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.