Skip to main content

கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த மனைவி; மக்கள் போராட்டம்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Wife passed away in front of husband in bus accident

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருராஜபாளையம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி (52). இவரது மனைவி பரிமளா (48). இவர்கள் இருவரும் கறவை மாடு வளர்த்து வீடுகளுக்கு பால் ஊற்றும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(26.5.2024) மாலை கணவன் மனைவி இருவரும் வீடுகளுக்கு பால் ஊற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் குருவராஜ பாளையம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  ஒடுக்கத்தூரில் இருந்து ஆம்பூர் வழியாக வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரிமளா மீது அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் கணவன் கண் முன்னே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் முனிசாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அரசு பேருந்து ஓட்டுநரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இப்பகுதி சாலையில் வேகத்தடை இல்லாததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும் என கூறி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதன்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்