
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (37). கட்டட மேஸ்திரியான இவருடைய மனைவி பிரேமா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆக. 23ம் தேதி, அதிகாலை 2.30 மணியளவில் பிரேமா தனக்கு திடீரென்று காது வலிப்பதாகக் கூறி, உடனடியாக டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் இல்லாவிட்டால் செத்து விடுவேன் போலிருக்கிறது. அந்தளவுக்கு காது வலிக்கிறது எனக் கூறியிருக்கிறார் பிரேமா.
இதையடுத்து பெரியசாமி, தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை அமர வைத்துக் கொண்டு, மோகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பொய்யேரிக்கரை பாலம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பெரியசாமி உயிரிழந்துவிட்டதாகக் கூறி, மோகனூர் காவல்நிலையத்திற்கும் உறவினர்களுக்கும் பிரேமா தகவல் அளித்தார். காவல்துறையினரும் பெரியசாமி சாலை விபத்தில் இறந்துவிட்டதாக வழக்குப்பதிவு செய்தனர். சடலத்தை உடற்கூராய்வு செய்த பிறகு, மனைவியிடம் ஒப்படைத்தனர். பெரியசாமியின் உறவினர்கள், அவர்களின் வழக்கப்படி சடலத்தை அடக்கம் செய்து முடித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, சாலை விபத்தில் பெரியசாமி மட்டும் உடலில் காயங்களுடன் உயிரிழந்துவிட, அவருடன் வாகனத்தில் சென்ற பிரேமா மட்டும் சிறு காயமின்றி உயிர் தப்பியது எப்படி என காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி, பெரியசாமி ஓட்டிச் சென்ற வாகனத்திற்கு சிறு சேதம் கூட ஏற்படாமல் இருந்ததும், காது வலியால் உயிர் போகிறது என்று அலப்பறை செய்த பிரேமா அதன்பிறகு டாக்டரிடம் செல்லாமல் சாதாரணமாக நடமாடியதும் பலத்த சந்தேகங்களைக் கிளப்பியது. கணவர் கண் முன்னே இறந்தும் கூட அதற்காக வருத்தப்படாமல் எப்போதும்போல் இருந்ததும் அவர் மீதான சந்தேகத்தை வலுவாக்கியது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போதுதான் பெரியசாமி சாலை விபத்தில் இறக்கவில்லை என்பதும், அவரை பிரேமா தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய திடுக்கிடும் தகவல்களும் தெரிய வந்தன.

மோகனூர் காவல்துறையினர், பிரேமாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். கடந்த ஒரு மாதமாக அவருடன் யார் யார் அடிக்கடி தொடர்பில் இருந்தனர்? பெரியசாமி இறந்ததாகச் சொல்லப்பட்ட நாளில் பிரேமா யார் யாருடன் பேசியுள்ளார்? என்பது குறித்த சிடிஆர் அறிக்கையைப் பெற்று விரிவான விசாரணை நடத்தினர். இதில், தர்மபுரி மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் என்கிற நந்திகேசவன் (28) என்ற வாலிபருடன் பிரேமா அடிக்கடி மணிக்கணக்கில் பேசி வந்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களுக்குள் இருந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட பெரியசாமி அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் கணவன் என்றும் பாராமல் பிரேமா, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பெரியசாமியை அடித்துக் கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்ததாக சித்தரித்துள்ளார். காவல்துறை விசாரணையின்போது இதை பிரேமாவும் ஒப்புக்கொண்டார்.
மேலும், நந்திகேசவனை தூக்கி வந்த காவல்துறையினர் அவரிடமும் விரிவான விசாரணை நடத்தினர். நாங்கள் சந்தோஷமாக வாழ பெரியசாமி தொடர்ந்து இடையூறாக இருந்ததால் அவரை போட்டுத் தள்ளிவிட்டோம் என்றும் ஒப்புக்கொண்டார் விசாரணையின் போது, பிரேமா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் நம்மிடம் சில விவரங்களைச் சொன்னார்கள், “என் கணவர் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பது குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. அதனால் நானும் ஒரு பேக்கரி கடைக்கு வேலைக்குச் சென்று வந்தேன். அதே கடையில் கேசவன் என்கிற நந்தி கேசவனும் வேலை செய்து வந்தார். அப்போது எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவன், மனைவி போல வாழத் தொடங்கினோம். எங்களுக்குள் இருக்கும் உறவை எப்படியோ என் கணவர் கண்டுபிடித்துவிட்டார். இனிமேல் கேசவனை சந்திக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஒருநாள் அவர், பேக்கரி கடைக்கே வந்து என்னையும், கேசவனையும் ஆபாசமாகத் திட்டினார். இனிமேல் வேலைக்குச் செல்லக்கூடாது என்றுகூறி என்னை வேலையை விட்டு என் கணவர் நிறுத்திவிட்டார்.
இதற்கிடையே, பேக்கரி கடைக்காரரும் கேசவனை வேலையை விட்டு நிறுத்திவிட்டார். அதன்பிறகு கேசவன், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தார். இதனால் எங்களால் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. ஆனாலும் செல்போன் மூலம் பேசி வந்தோம். இதை அறிந்த என் கணவர் செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டார். என் கணவருடன் எனக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கவில்லை. நான் ஒரு சிறைக்கைதி போல உணர்ந்தேன். எனக்குப் பிடித்தமான வாழ்க்கை வாழவும் அவர் முட்டுக்கட்டையாக இருந்தார். என் கணவர் உயிருடன் இருக்கும் வரை, நாம் நிம்மதியாக வாழ முடியாது என கேசவனிடம் சொன்னேன். அதனால் அவரை தீர்த்துக் கட்டிவிட முடிவு செய்தோம்.
அதன்பிறகுதான், சம்பவத்தன்று அதிகாலையில் எனக்கு காது வலிப்பதாகக் கூறி அவரை மோகனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன். நானும் கேசவனும் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி, பொய்யேரிக்கரை பாலம் அருகே சென்றபோது எங்கள் மோட்டார் சைக்கிளை கேசவனும், கேசவனுக்கு உதவியாக வந்த அவருடைய நண்பர் தனுஷ் என்பவரும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். அவர்கள் இருவரும் என் கணவரை இரும்பு கம்பியால் தாக்கினர். கணவர் தாக்கப்படும்போது அவர் அலறி துடித்ததை பார்க்க முடியாமல் நான் கண்களை மூடிக்கொண்டேன். பலத்த காயம் அடைந்த என் கணவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவர் இறந்துவிட்டாரா? அல்லது உயிருடன் இருக்கிறாரா? என்பதை மார்பில் காதை வைத்து இதயத் துடிப்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்த்தோம். இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியதை அடுத்து கேசவனையும், தனுஷையும் அங்கிருந்து அனுப்பிவிட்டேன்.

அதையடுத்து, கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக எங்கள் உறவினர்களுக்கு தகவல் அளித்தேன். அவர்களும், காவல்துறையினரும் நான் சொன்னதை நம்பி விட்டனர். ஆனால் சந்தேகத்துக்குரிய என் நடவடிக்கையால் தான் நாங்கள் காவல்துறையில் சிக்கிக் கொண்டோம்” என்று பிரேமா விசாரணையின் போது கூறியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதையடுத்து பிரேமா, கேசவன் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் (23) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில ஆஜர்படுத்திய பிறகு, மூவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவால் கணவரை கொன்றுவிட்டு, விபத்தில் இறந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் மோகனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.