
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ஆவுடையார்கோயில் அருகில் உள்ள மைனாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர் சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பிற்காக தனது மனைவி ராஜலெட்சுமி மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு புதுக்கோட்டை மாவட்டம், முக்கணாமலைப்பட்டி ஜாபர் அலி என்பவரின் புரூணை நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு உறவினர்களிடம் கடன் வாங்கி வேலைக்கு சென்றார்.
சில மாதங்களில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் 16.09.2022 அன்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், காய்ச்சல் குணமாகாமல் கோமா நிலைக்கு போய்விட்டதாக தகவல் கூறியுள்ளனர். கட்டுமான நிறுவன முதலாளி ஜாபர் அலி சுரேஷுக்கான சிகிச்சை பற்றி அடிக்கடி சுரேஷ் வீட்டிற்கு தகவல் கூறியுள்ளார். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், தனது கணவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராஜலெட்சுமிமத்தியமாநில அரசுகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். ஆனால், சிகிச்சையில் இருப்பதால்இந்தியா அழைத்து வர முடியாத நிலையில் உள்ளார் என தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், 2022 டிசம்பர் 25ம் தேதி சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ராஜலெட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தன் கணவர் தங்களை விட்டு பிரிந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு கதறி அழுத ராஜலெட்சுமி தனது கணவரை உயிருடன் தான் அழைத்து வர முடியவில்லை. தற்போது உயிரிழந்த நிலையிலாவது கணவரின்உடலை மீட்டுத் தாருங்கள் என மாவட்ட ஆட்சியர் முதல்எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோருக்கு மீண்டும் கோரிக்கை மனு அளித்தார்.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ராஜலெட்சுமியின் மனுவை சென்னை வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆணையர் அலுவலகத்திற்கும், பொதுத்துறை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். ஆனால் சிகிச்சைக்கான பணம் ரூ. 24 லட்சம் கட்ட வேண்டும் என்ற பதிலே கிடைத்தது. வறுமையில் வாடும் குடும்பம் எங்கிருந்து ரூ. 24 லட்சம் பணம் கட்ட முடியும். குடும்ப வறுமையை போக்க சுரேஷ் வெளிநாடு செல்ல வட்டிக்கு வாங்கிய கடன் கூட கட்ட முடியாத நிலையில் இரண்டு குழந்தைகளைவைத்துக் கொண்டு நிர்க்கதியாய் நிற்கிறார் மனைவி ராஜலெட்சுமி என்பதுஉறவினர்களின் கதறலாக இருந்தது.
இந்த நிலையில் தான் புரூணை வாழ் தமிழ் சமுதாயம், இந்தியன் அசோசியேஷன் இணைந்து கரம் கோர்த்து அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வசூலித்த பணம் மற்றும் எம்பசி மூலம் கிடைத்த தொகையோடு, நிறுவன முதலாளி ஜாபரின் பங்கு தொகை வசூலித்து பாதித் தொகையை கட்டி மீதி தொகையை முதலாளி ஜாபர் கட்டுவதாக உறுதி அளித்த பிறகு 55 நாட்களுக்கு பிறகு சுரேஷின் உடலைப் பெற்றுள்ளனர். நேற்று இரவு செவ்வாய் கிழமை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சுரேசின் உடல் புதன்கிழமை காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
55 நாட்களுக்கு பிறகு சுரேசின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் தகவல் தெரிந்த அவரது உறவினர்களும், நண்பர்களும் கண்ணீரும் மாலையுமாக காத்திருந்தனர். மதியம் ஆம்புலன்ஸ்சில் பெட்டியில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட உடலைப் பார்த்து கதறி அழுத உறவினர்கள் கொண்டு வந்த மாலைகளை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிறிது நேரத்திற்கு மேல் உடல் அங்கிருந்தால் உறவினர்கள் பலரும் மூர்ச்சையாகி விடுவார்கள் என்பதால் அவசர அவசரமாக மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். முகம் தெரியாத ஒருவரின் உடலாக இருந்தாலும் கூட கடைசியாக அவரது முகத்தையாவது அவரது மனைவி, மக்கள், சொந்தங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக நாள் கணக்கில் உழைத்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து சுரேசின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிய உறவுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர் சுரேஷ் உறவினர்கள்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் வேலைக்கு சென்று உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு உதவியும் கல்வி செலவையும் ஏற்பதாக கூறியது போல சுரேஷ் குடும்பத்திற்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும். இரண்டு குழந்தைகளை படிக்க வைக்கவும் வளர்க்கவும் உதவியாக ஏதேனும் ஒரு அரசுப்பணி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
எங்கோ ஒரு மூலையில் மனிதம் வாழ்கிறது என்பதற்கு இதெல்லாம் சான்றாகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)