கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஏ குரும்பூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம். வயது 31. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள பூதாமூரை சேர்ந்தவர் சிந்து. வயது 29. இவர்கள் இருவரும் 2013இல் போலீஸ் பணியில் சேர்ந்தனர். செம்புலிங்கம் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு எழுதி வெற்றி பெற்று அவர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சிந்து சென்னை ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணி செய்து வருகிறார்.
இருவரும் காவல் பணியில் சேர்ந்தது முதல் காதலித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதற்கிடையே மனைவி சிந்துவிடம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சிந்துவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர் இதனால் சிந்து கணவரை விட்டுப் பிரிந்து சிலமாதங்களாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் ஜம்புலிங்கத்திற்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு அந்தபெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதை அறிந்த சிந்து இதுகுறித்து கணவர் ஜம்புலிங்கத்தை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் சிந்துவை திட்டி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து சிந்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவர் ஜம்புலிங்கம் மற்றும் அவரது தாய் சுமதி சகோதரி சுப்புலட்சுமி ஜம்புலிங்கத்துடன் வசித்து வரும் கவிதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். சிந்துவின் புகாரின் மீது வழக்கு பதிந்து அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காவல் துறையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததுள்ள சம்பவம் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.