
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை (48). விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மணியார்பாளையம் அருகில் உள்ளது. இந்த நிலத்திற்கு விவசாயம் செய்வதற்காக அடிக்கடி வந்துசெல்வார். அய்யாதுரை வழக்கம்போல் நேற்று முன்தினம் (19.07.2021) விவசாய பணிக்காக மணியார்பாளையம் நிலத்திற்கு வந்தவர், உடலில் காயங்களுடன் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து கரியாலூர் காவல்துறைக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். வழக்குப் பதிவுசெய்து இவரது கொலைக்கு யார் காரணம் என்று தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில்அய்யாதுரையின் இரண்டாவது மனைவி மல்லிகா, மணியார்பாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் நேற்று காலை சென்று சரணடைந்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மல்லிகாவை போலீசாரிடம் ஒப்படைத்தார். மல்லிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தினசரி அய்யாதுரை குடித்துவிட்டு வந்து மல்லிகாவை அடித்து, உதைத்து, திட்டி சித்திரவதை செய்துவந்ததாகவும் நேற்று முன்தினம் மதியம் வயலில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு சாப்பிட சென்ற அய்யாதுரை மல்லிகாவை அருவருப்பான வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மல்லிகா, அருகில் கிடந்த களை எடுக்கும் ஆயுதத்தால் கணவரின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அய்யாதுரை இறந்துவிட்டதாகவும் எனவே தனது கணவர் அய்யாதுரை சாவுக்குத் தான்தான் காரணம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை கைதுசெய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் மல்லிகாவை சிறையில் அடைத்துள்ளனர். கணவரை அவரது இரண்டாவது மனைவியே கொலை செய்த சம்பவம் கல்வராயன்மலை பகுதியில் வாழும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)