Skip to main content

சென்னையில் பரவலாக மழை!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
Widespread rain in Chennai!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (19.05.2024) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (20.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Widespread rain in Chennai!

இந்நிலையில் சென்னையின் மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அதன்படி அசோக் நகர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மேற்கு மாம்பலம், அடையாறு, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, எம்.ஆர்.சி.நகர், தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் (21.05.2024) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘நீலகிரிக்கு ரெட் அலர்ட்’ - வானிலை மையம் தகவல்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
'Red Alert for Nilgiris' - Meteorological Department Information

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (18.07.2024) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18.07.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
arrested ADMK executive in Armstrong case she from party removed

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக  சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மேலும்  மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக கூறி போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக இதுவரையில் 14 பேர் கைது செய்யபட்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டார்.

எனவே கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்கொடி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி கடந்த 2001 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.