Advertisment

கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏன்? அன்புமணி 

Anbumani Ramadoss

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டும் சிக்கலுக்கு தீர்வு காண தமிழ்நாடு- கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலைப்பாடு ஒருதலைபட்சமானது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

Advertisment

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி தில்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மேகதாது அணையை கட்ட உதவி செய்யும்படி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு தான் இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நிதின்கட்கரி உறுதியளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை.

Advertisment

மத்திய அரசு என்பது தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவானது ஆகும். இரு மாநில மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது, இரு மாநில அரசுகளும் கோரிக்கை விடுக்காத நிலையில், எந்த பிரச்சினை குறித்தும், எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தி பேச்சு நடத்த அழைக்க முடியாது. மேகதாது அணை தொடர்பாக பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடகம் மட்டுமே கோரியிருக்கிறது. தமிழகத்தின் சார்பில் அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்படாத நிலையில் தமிழகத்தை பேச்சுக்கு அழைக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக அமைந்துவிடும்.

இந்த உண்மைகள் மத்திய அரசுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. கடந்த 6 மாதங்களாகவே இத்தகைய முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு நடுநிலையான அரசாக இருந்தால், மேகதாது விவகாரத்தில் சட்டம் மற்றும் விதிகளின்படி மட்டுமே செயல்பட வேண்டும். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே அணைகளை கட்டக் கூடாது என்பது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு ஆகும். அதைத் தான் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். மேகதாது குறித்து கர்நாடக அரசு எந்த அனுமதி கோரினாலும் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால், அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது.

ஆனால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு தன்னிச்சையாக அனுமதி அளித்த மத்திய அரசு, இப்போது அணைக்கான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காகவே இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு துடிக்கிறது.

மத்திய அரசின் நிலைப்பாட்டை மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான நல்லெண்ண நடவடிக்கையாக ஏன் பார்க்கக்கூடாது? என்ற வினா எழலாம். ஆனால், மத்திய அரசின் நிலைப்பாட்டை அப்படி பார்க்க முடியாது. ஏனெனில், காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, அத்தீர்ப்பை மதிக்கும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முடியும் என்றாலும் அதை செய்யவில்லை. மாறாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் எதிர்க்கிறது என்பதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்தது தான் மத்திய அரசு. அத்தகைய மத்திய அரசு மேகதாது அணை விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது என்றால் அதை யாரும் நம்ப மாட்டார்கள்.

மேகதாது அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்துக்கு தான் கூடுதல் நன்மை என்பதால், அதை தமிழக அரசிடம் எடுத்துக் கூறி ஒப்புதலைப் பெற்றுத் தர உதவும்படி குமாரசாமி கோரியதன் அடிப்படையில் தான் முதல்வர்கள் கூட்டத்தை நடத்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சம்மதித்துள்ளார். இதிலிருந்தே இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். எனவே, மத்திய அரசே அழைத்தாலும் மேகதாது அணை குறித்த எந்த பேச்சிலும் தமிழக அரசு கலந்து கொள்ளக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

Central Government megathathu anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe