ADVERTISEMENT

கீழ்வெண்மணியில் சீமான் ஏன் வெளியேற்றப்பட்டார்?

10:37 AM Dec 27, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பெண்கள், குழந்தைகள் என 44 பேர் ஒரே குடிசையில் வைத்து ஒன்றாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் வகையில் வெண்மணியில் பிரம்மாண்டமான மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று நாடு முழுவதில் இருந்தும் பொதுமக்களும், பாட்டாளிவர்க்கத்தினரும், தலைவர்களும், அரசியல் கட்சியினரும் வந்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்திவருகின்றனர்.

அந்த சோக சம்பவத்தின் 53வது ஆண்டு நினைவு தினம் கடந்த 25ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. 44 பேர் இறந்துபோன இடம் குடிசையாக இருந்தது. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுப்பித்து நினைவிடமாக மாற்றினர். அந்த நினைவிடத்தை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அங்கிருந்த நினைவு தூணில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் அ.செளந்தரராஜன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் அங்கு வீரவணக்கம் செலுத்த வந்த நாம் தமிழர் கட்சியின் சீமான், கொடி, கோஷங்களுடன் வந்தார். அதனால் அவர்களை நுழைவிலேயே நிறுத்தி கொடிகள் ஏதும் எடுத்துச்செல்லக்கூடாது எனவும் சிலர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்து அஞ்சலி செலுத்த நாம் தமிழர் கட்சியினர் அனுமதிக்கப்பட்டனர். அதன்படியே சீமானோடு சிலர் வெண்மணி தியாகிகள் நினைவிடத்திற்குச் சென்றனர். மலர்தூவி மரியாதை செய்தவர் வழக்கம்போல அவரது கட்சி பாணியில் முழக்கங்களை எழுப்பினார்.

இதனை கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினரும், நினைவிட பொறுப்பாளர்களும், ‘யார் வேண்டுமானாலும் வரலாம், மரியாதை செய்யலாம் கொடிகளுடன் வந்து முழக்கமிட்டு சலசலப்பை உண்டாக்கிட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’ என அவர்களை அங்கிருந்து விலகிச் செல்ல சொன்னார். ஆவேசமடைந்த சீமானோ, “இது பொதுமக்கள் பலியானது; உழைக்கும் மக்கள் பலியான நினைவிடம். இங்கு எல்லா தமிழர்களும் வணக்கம் செலுத்த கடமை, உரிமை இருக்கு” எனக் கூற, அந்த இடத்தில் வாய் தகராறு, தள்ளுமுள்ளு என சலசலப்பானது.

இறுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் நாம்தமிழர் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து நாம் தமிழர் கட்சியினரிடமே கேட்டபோது, “நாகையில் ஆர்பாட்டம் இருந்தது. அங்க வந்த எங்கள் கட்சித் தலைவர் சீமான், அருகில் இருக்கும் வெண்மணி தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்த திட்டமிட்டு வந்தார். வழக்கம்போல கட்சி கொடிகள், எங்கள் கட்சி முழக்கங்களுடன் வந்தோம். வழியிலேயே தடுத்துவிட்டனர். பிறகு சிலரை அங்கு அனுப்பினர். நினைவிடத்தில் வீரவணக்கம் செய்தோம். திடீரென அங்கு வந்தவர்கள் முழக்கமெல்லாம் போடக்கூடாது; சத்தம்போட அனுமதியில்லன்னு சொல்லி தகறாறு செய்யுறாங்க. இது என்ன நியாயம்” என்று தெரிவித்தனர்.

நினைவிடத்தை நிர்வகித்துவரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, “யார் வேண்டுமானாலும் வரலாம், மலர்தூவி மரியாதை செய்யலாம். ஆனால், நாம் தமிழர் கட்சியினரின் முழக்கம் அரசியல் மோதலை உண்டாக்கும் விதமாக இருந்தது. இந்த நினைவிடத்தை நாங்கள் புனிதமாக மதிக்கிறோம். இங்கு அவர் பார்வை எடுபடாது. அதனால் முழக்கமிடக்கூடாது என வெளியேற சொன்னோம்” என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT