Why Tamilnadu's visually impaired heroes who have achieved in Gujarat soil are not noticed?

Advertisment

இந்திய பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் குஜராத்தில் 14-12-2024 முதல் 16-12-2024 வரை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான 23 வது தேசிய அளவிலான தடகள போட்டியை நடத்தியது. இப்போட்டியில் தமிழக பார்வை மாற்றுத்திறனாளி 8 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு 11 பதக்கங்களை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர்.

பார்வையற்றோருக்கான தடகளப் போட்டியில் பார்வை மாற்றுத் திறனாளிகள் மூன்று வகையாக பிரிக்கப்படுவர். முற்றிலும் பார்வை தெரியாதவர் b1, 75%-க்கு மேல் பார்வை குறைபாடுடையவர் b2, 40% முதல் 75% வரை பார்வை குறைபாடுடையவர் b3. இந்தப் பகுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

தற்போது குஜராத்தில் நடந்த போட்டிகளில், B1 பிரிவில் பிரகதீஸ்வரராஜா 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்களையும், சகாதேவன் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், சங்கீதா வட்டெரிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கத்தையும் தமிழகத்திற்கு வென்றிருக்கின்றனர்.b3 பிரிவில் சுரேஷ் 100 மற்றும் 200 ஓட்ட போட்டிகளில் இரு தங்கப் பதக்கத்தையும், நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கத்தையும் வென்றிருக்கிறார். பார்த்திபன் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழக அணி வெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறது. மொத்தத்தில் ஏழு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 11 பதக்கங்களை தமிழக வீர வீராங்கனைகள் வென்றிருக்கின்றனர்.

Advertisment

தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் இப்போட்டிக்கான சிறந்த வீர வீராங்கனைகளை கடந்த மாதம் மதுரையில் தேர்வு நடத்திய தேர்வில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் கலந்து கொண்ட நிலையில் 8 வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து பயிற்சியளித்து குஜராத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றது. இதற்காக சுமார் ரூ.1.50 லட்சம் வரை செலவாகி உள்ளது.

வீரர்கள் போட்டிக்கு சென்று திரும்புவதற்கான போக்குவரத்து செலவையும் உணவுக்கான செலவையும் திருப்பத்தூர் டிஎஸ்பி செல்வகுமார், ரயில்வே டிஎஸ்பி காமாட்சி ஆகியோருக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் சங்கத்தின் சார்பிலும், வீரர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். ஆனால், குஜராத் மண்ணில் இத்தனை பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளி வீரர்களை தமிழ்நாடு அரசோ, அமைச்சர்களோ அழைத்து பாராட்டவில்லை என்ற மன வருத்தம் இந்த வீரர்களிடம் மனக்குறையாக உள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த வீரர்களை அழைத்து பாராட்டுவார் என்று காத்திருக்கின்றனர். துணை முதல்வர் இது போன்ற தனித்திறன் படைத்தவர்களை அழைத்து பாராட்டுவதே அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதைவிட மேலும் சாதிப்பார்கள் என்பதே நிதர்சனம்.